இந்தியா

ஆப்கன் விவகாரம்: விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டம்: மத்திய அரசு அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விவாதிக்க விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைபற்றியுள்ளனர். ஆப்கனில் பல்வேறு நகரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். குறிப்பாக காபூலில் 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி இருந்தனர். அங்குள்ள இந்தியா அழைத்து வர தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அவர்களை மீட்பதற்காக இந்திய விமானப்படையின் சி17 விமானம் கொண்டு செல்லப்பட்டது. இந்தியா விமானத்தில் ஏறுவதற்காக வெளியே வந்து சேர்ந்த 150 இந்தியர்களையும் தலிபான்கள் சுற்றி வளைத்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து இந்தியர்களை மீட்க தலிபான்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் நேற்று அடுத்தடுத்து இரண்டு விமானங்களில் இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

இந்த விமானத்தில் இந்தியர்கள் அல்லாமல் ஆப்கனைச் சேர்ந்த இந்துக்களும், சீக்கியர்களும் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தனர். இந்தியர்கள் மட்டுமின்றி ஆப்கன் நாட்டைச் சேர்ந்த மக்கள் சிலரும் அடைக்கலம் தேடி அகதிகளாக இந்தியா வந்துள்ளனர்.

இந்தநிலையில் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘‘ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்து விளக்கம் அளிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி இதுதொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்’’ என பதிவிட்டுள்ளார்

SCROLL FOR NEXT