கடந்த ஜூன் மாதத்தில் 12.8 லட்சம் பிஎப் கணக்குகள் சேர்க்கப்பட்டுள்ளதாக பணியாளர் சேமநல நிதி நிறுவனம் கூறியுள்ளது.
உலகம் முழுவதும் பரவிய கரோனா பெருந்தொற்றைகட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக வேலைஇழப்பு ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளாக இதன் பாதிப்புநீடித்து வரும் நிலையில் தற்போது கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதால், ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் தொழில் நிறுவனங்கள் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி வருகின்றன என்று பணியாளர் சேமநல நிதி நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த ஏப்ரல், மே மாதங்க ளோடு ஒப்பிடுகையில், ஜூன் மாதத்தில் மொத்தமாக 12.8 லட்சம் பேர் பிஎப் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மே மாதத்தைக் காட்டிலும் ஜூன் மாதத்தில் கூடுதலாக 5 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஜூன் மாதத்தில் மொத்தமாக இணைந்துள்ள 12.8 லட்சம் பிஎப் கணக்குகளில் 8.1 லட்சம்பேர் புதிய உறுப்பினர்கள். இவர்கள் பணியாளர் சேமநல நிதி திட்டத்தின் சமூக பாதுகாப்பு கவரேஜின் கீழ் இணைந்துள்ளனர்.
அதேசமயம் பிஎப் உறுப்பினர் பட்டியலில் இருந்து விலகிய 4.7 லட்சம் பேர் மீண்டும் வேறொரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததன் மூலம் மீண்டும் பிஎப் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர் என பிஎப் நிறுவனம் தெரிவித் துள்ளது.
மேலும் பணி மாறுபவர்களில் பெரும்பாலானவர்கள் பிஎப் தொகையை எடுக்காமல் முந்தைய கணக்கை புதிய கணக்குடன் இணைத்துக்கொள்கிறார்கள் என்றும் கூறியுள்ளது.
ஜூன் மாதத்தில் பிஎப் உறுப்பினர்களாக இணைந்தவர்களில் 47.8 சதவீதம் அதாவது 6.1 லட்சம் பேர் 18 வயது முதல் 25 வயது பிரிவினர் எனவும் பிஎப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. - பிடிஐ