பாஜக கவுன்சிலரை சுட்டுக் கொ ன்ற ஜெய்ஷ்-இ-முகமது (ஜேஇஎம்) தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் நகராட்சி பாஜக கவுன்சிலர் ராகேஷ் பண்டிட்டாவை கடந்த ஜூன் 2-ம் தேதி 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையில், கடந்த 20-ம் தேதி அவந்திபோரா பகுதியில் உள்ள நாக்பேரன் வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உள்ளூர் போலீஸார், பாதுகாப்புப் படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. அதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவர் வகீல்ஷா என்பதும் இவர்தான், கவுன்சிலர் பண்டிட்டாவை கொன்றவர் என்பதும் தெரியவந்துள்ளது. - பிடிஐ