உலகில் சர்வாதிகாரம் நீண்டகாலம் நீடித்ததாக வரலாறு இல்லை என்றுகேரளாவில் பயிலும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் ஐசிசிஆர் திட்டத்தின் கீழ், வெளிநாட்டைச் சேர்ந்த ஆய்வு மாணவர்கள் கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் அரசு உதவித்தொகையுடன் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் இப்போதைய அரசியல் சூழலால் அவர்கள் கடும்அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக்கழக ஆய்வு மாணவரான முபாக்கர், இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் கூறிய தாவது:
ஆப்கானிஸ்தான் தலைநகருக்குள் தலிபான்கள் நுழைந்துவிட்ட தகவல் கிடைத்ததுமே பீதியாகிவிட்டேன். நான் ஆயிரக்கணக்கான கி.மீ. தள்ளி கேரளத்தில் இருக்கிறேன். ஆனால் என் பெற்றோர்கள்ஆப்கானிஸ்தானில் இருப்பதால் பதட்டமடைகிறேன். என் சகோதரர் ஆப்கானிஸ்தான் தேசிய ராணுவத்தில் அதிகாரியாக பணிசெய்கிறார். நான் என் குடும்ப உறுப்பினர்களை அழைத்துப் பேசினேன். அவர்கள் அனைவருமே தலிபான்களுக்கு மிகவும் பயப்படுகிறார்கள். அவர்களது தொலைபேசி உரையாடலிலேயே அச்சம் தெரிகிறது. என் சகோதரர் ராணுவ அதிகாரி என்பதால் அவர் உயிருக்கு அதிக ஆபத்து உள்ளது.
ஆப்கானிஸ்தானின் ஆட்சி வீழ்ச்சியடைந்து அதிகாரங்கள் அனைத்தும் அடிப்படைவாதிகளின் கைக்கு போனதுமே என் சகோதரர்பணியை கைவிட்டு வீடு திரும்பி விட்டார். அண்டை நாடான பாகிஸ்தான் தலிபான்களுக்கு எல்லாவகையிலும் ஆதரவு அளிக்கிறது. உலகில் சர்வாதிகாரம் நீண்டகாலத்துக்கு நீடித்ததாக வரலாறு இல்லை.
அப்பாவிகளைக் கொல்வதிலும், ஒரு நாட்டின் உள்கட்டமைப்புகளை அழிப்பதிலும் தலிபான்களுக்கு 25 வருட அனுபவம் இருக்கிறது. 9 ஆண்டுகளுக்கு முன்பு நான் தலிபான்கள் பிடியில் சிக்கவேண்டியவன். நான் பாக்டியா மாகாணத்தில் உள்ள என் சொந்தகிராமத்துக்கு ஒரு திருமண விழாவுக்குச் சென்றேன். பாக்டியா பகுதி தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. நான் அங்கிருந்து திரும்பும்போது தலிபான்கள் என்னை கொல்லவோ, கடத்தவோ திட்டமிட்டனர். இது உறவினர் ஒருவர் மூலம் தெரியவர அங்கிருந்து தப்பினேன்.
அங்கிருந்து கிளம்பாமலேயே உறவினர்களையும், ஊர்க்காரர்களையும் நான் அங்கிருந்து கிளம்பிவிட்டதாக நம்பவைத்தேன். அப்படித்தான் அவர்கள் மூலமே தலிபான்களுக்கு தவறான தகவலைக் கொடுத்துத் தப்பித்தேன்.
தலிபான்களுக்கு பயந்து ஏற்கெனவே ஆப்கானிஸ்தானில் உள்ள ராணுவ உயரதிகாரிகளும், அரசு உயர் பொறுப்புகளில் இருந்தவர்களும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். நீண்ட காலம் நீடித்துவந்த உள்நாட்டு வன்முறை முடிவுக்கு வந்திருக்கிறது என்பதைத் தாண்டி இதில் ஆரோக்கியமான விஷயம் எதுவுமே இல்லை. தேசம்கிளர்ச்சியாளர்களின் கைக்கு போய்விட்டது. இப்போது பார்ப்பதெல்லாம் தொடக்கம்தான். தலிபான்களின் ஆட்சியில் இனி என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதைபொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
படிப்பு முடிந்து எனது சொந்த நாட்டுக்கு சென்றால் நிச்சயமாக எனக்கு இருண்டகாலமே காத்திருப்பதாக நினைக்கிறேன். ஆப்கானிஸ்தானில் நகர்ப்புற வளர்ச்சிக்கழகத்தில் அரசுப்பணியில் இருந்தநான் கல்வியின் மீதுகொண்ட ஆர்வத்தால் நான் பார்த்துக்கொண் டிருந்த வேலையை விட்டுவிட்டுகேரளா வந்தேன். அதிர்ஷ்டவசமாக நான் கேரளப் பல்கலைக்கழகத்தில் சேரும்போது என் மனைவி,குழந்தைகளையும் அழைத்துவந்தேன். இப்போதைய சூழலில் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பும் எண்ணமே இல்லை. இந்தியாவிலேயே தங்க விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு ஆய்வு மாணவரான ஆப்கானிஸ்தானை சேர்ந்தமுஸ்தபா சலீம், ‘‘ஆப்கானிஸ்தானின் இப்போதைய சூழல்கவலையளிக்கிறது. அதைத்தாண்டி என்ன பேசுவது என்றே தெரியவில்லை. விசாவை புதுப்பிக்க ஆப்கானிஸ்தானுக்கு சென்றமாணவர்களில் பலர் இன்னும்திரும்பவில்லை. அங்கேயே சிக்கிக்கொண்டனர். ஆப்கானிஸ்தானில் இனி அமைதி என்பது இருக்குமா எனத் தெரியவில்லை’’ என கவலையோடு தெரிவித்தார்.