உத்தர பிரதேசத்தில் முலாயம் சிங் முதல்வராக இருந்த போது அமைச்சராக இருந்தவர் சவுத்ரி பஷீர் (45). இவர் சமாஜ்வாதியில் இருந்து 3 கட்சிகளுக்கு மாறினார். பின்னர் தனித்து அரசியலில் ஈடுபட தொடங்கினார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை தனது 4-வது மனைவி நக்மாவிடம் (30) தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார் பஷீர். இதுதொடர்பாக அவரது மனைவி போலீஸில் புகார் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் பஷீர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு பஷீரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி அவரை சிறையில் அடைத்தனர் என்று ஆக்ரா எஸ்எஸ்பி முனிராஜ் ஜி நேற்று தெரிவித்தார்.
கடந்த 2012-ம் ஆண்டு பஷீரை நக்மா திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். போலீஸில் அளித்த புகாரில், ‘‘கணவர் அவரது சகோதரிகளின் சித்ரவதை தாங்க முடியாமல் கடந்த 3 ஆண்டுகளாக பெற்றோர் வீட்டில் வசிக்கிறேன். தற்போது, என் கணவர் பஷீர் இன்னொரு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பது தெரிய வந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று நக்மா தெரிவித்துள்ளார்.