அன்றாடம் கரோனா தொற்று குறிப்பிடத்தக்க அளவு குறைந்துவரும் நிலையில் டெல்லியில் கூடுதல் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி டெல்லியில் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தளர்வு திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. இந்தத் தளர்வு மால்கள், வணிக வளாகங்களில் உள்ள கடைகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களும் இரவு 10 மணியைத் தாண்டியும் இயங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தளர்வுகள் குறித்து அறிவித்த முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், இப்போதுவரை டெல்லியில் உள்ள சந்தைகள் அனைத்தும் இரவு 8 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி உள்ளது. கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் இந்த கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 19 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டுள்ளது. 0.03% என்றளவில் பாசிடிவிட்டி ரேட் உள்ளது. பாசிடிவிட்டி என்றால் 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று இருக்கிறது என்பதைக் குறிக்கும் மதிப்பீடு.
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கரோனா இரண்டாவது அலையின் போது டெல்லி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அன்றாடம் 20,000க்கும் மேல் பாதிப்பு இருந்தது. உச்சபட்ச ஒரு நாள் பாதிப்பாக 28,395 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாசிடிவிட்டி விகிதம் 35% சதவீதத்தைக் கடந்திருந்தது.
மே 15 ஆம் தொடங்கி பல கட்டங்களாக அங்கு முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இப்போது வரை சந்தைகள், கடைகள், உணவகங்களுக்கு நேரக் கட்டுப்பாடு உள்ள நிலையில், வரும் திங்கள் முதல் அங்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் குறையும் தொற்று:
இந்தியாவில் அன்றாட கரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,457 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த 151 நாட்களில் இல்லாத அளவு இந்தியாவில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 57 கோடியே 61 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.