மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் பாஜகவின் மக்கள் ஆசி யாத்திரையில் கட்சிக் கொடியின் நிறம் பூசப்பட்ட குதிரை பயன்படுத்தப்பட்டது தொடர்பாக பாஜக எம்.பி. மேனகா காந்தியின் தன்னார்வ அமைப்பு போலீஸில் புகார் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் மேற்கொண்ட அமைச்சரவை விரிவாக்கத்தில் புதிய முகங்கள் பலருக்கு வாய்ப்பளித்துள்ளார். புதிய அமைச்சர்களை மக்களிடம் அறிமுகப்படுத்தும் வகையில் 22 மாநிலங்களில் மக்கள் ஆசி யாத்திரையை பாஜக நடத்துகிறது.
இந்நிலையில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் இந்தூரில் நேற்று முன்தினம் மக்கள் ஆசி யாத்திரை நடைபெற்றது. இதில் பாஜக கொடியின் நிறங்களான ஆரஞ்சு மற்றும் பச்சை வண்ணம் பூசப்பட்ட குதிரை ஒன்று கொண்டுவரப்பட்டது. குதிரை மீது பிஜேபி எனவும் தாமரை சின்னமும் நீல நிறத்தில் வரையப்பட்டிருந்தது. இந்தக் குதிரையை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ராம்தாஸ் கர்க் வாடகைக்கு அமர்த்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக ‘பீப்பிள் பார் அனிமல்’ என்ற தன்னார்வ அமைப்பின் உள்ளூர் பிரதிநிதிகள் சார்பில் இந்தூரின் சன்யோகிதகஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விலங்குகள் சித்ரவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என புகாரில் கோரப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்திடமும் இவர்கள் புகார் அளிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக எம்.பி. மேனகா காந்தியால் ‘பீப்பிள் பார் அனிமல்’ அமைப்பு நிறுவப்பட்டது. அதன் தலைவராகவும் மேனகா காந்தி பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ