புதிதாக பொறுபேற்றுள்ள மத்திய அமைச்சர்கள் அவர்களது சொந்த மாநிலங்களில் மக்களின் ஆதரவை பெற நேரிடையாக மக்களை சந்திக்க பாஜக மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஜன் ஆசீர்வாத் யாத்திரை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், தனது சொந்த மாநிலமான இமாச்சல் பிரதேசத்தில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதுதொடர்பாக நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா வைரஸின் 3-வதுஅலையின் போது குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுவர் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அரசு சார்பில் குழந்தைகள் நலனுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் மோடியின் சீரிய தலைமையில் கரோனா வைரஸின் 3-வது அலையை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது.
இதற்காக மத்திய அரசு ரூ. 23,123 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த நிதியின் மூலம் மருத்துவக் கருவிகள், மருத்துவமனைகள், மருந்துகள், தற்காலிக மருத்துவமனைகள் அமைத்தல், வெளிநாட்டிலிருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
எனது ஜன் ஆசீர்வாத் யாத்திரையை சோலன் மாவட்டம் பர்வானு பகுதியிலிருந்து தொடங்கியுள்ளேன். மாநிலம் முழுவதும் 623 கிலோமீட்டர் தூரத்துக்கு சுற்றுப்பயணம் செய்து மக்களைச்சந்திக்கவுள்ளேன். இந்த யாத்திரையின் மூலம் 4 மக்களவைத் தொகுதிகள், 37 பேரவைத் தொகுதிகளில் உள்ள மக்களைச் சந்திப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
36,571 பேர் பாதிப்பு
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 36,571 பேர் புதிதாக கரோனா வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 36,555 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,15,61,635-ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் குணமடைந்தோர் சதவீதம் 97.54-ஆக உள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கரோனா பாதிப்பு, தொடர்ந்து 54 நாட்களாக 50,000க்கும் குறைவாக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 540 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,33,589 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் தற் போது 1.12-ஆக உள்ளது. கரோனா பரி சோதனை தொடர்ந்து விரிவு படுத்தப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 18,86,271 கரோனா பரிசோதனைகள் செய்யப் பட்டுள்ளன. இதுவரை 50.26 கோடிக்கு மேற்பட்ட (50,26,99,702) கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், வாராந்திர கரோனா பாதிப்பு வீதம் 1.93-ஆக உள்ளது. கடந்த 56 நாட்களாக 3 சதவீதத் துக்கும் குறைவாக உள்ளது. தினசரி கரோனா பாதிப்பு வீதம் 1.94-ஆக இருக்கிறது. இது கடந்த 25 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது. -பிடிஐ