காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜிதின் பிரசாதாவுக்கு உத்தரப் பிரதேச அமைச்சரவையில் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.
உத்தரப் பிரதேசம் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ளது. அதற்கு முன்னதாக கடைசியாக ஒருமுறை அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய பாஜக மேலிடம் முடிவு செய்தது. அதன்படி 53 பேர் கொண்டுள்ள அமைச்சரவையில் மேலும் 7 பேரை இணைத்து அவையின் உச்சபட்ச எண்ணிக்கையான 60ஐ கொண்டுவர திட்டமிடப்பட்டது.
புதிய அமைச்சரவையில் பிராமணர் ஒருவருக்கு இடம் அளிக்க வேண்டும் என்ற யோசனையின் அடிப்படையில் உ.பி. மக்களுக்கு நன்கு பரிச்சியமானவர் என்ற முறையில் அடுத்த தேர்தலை மனதில் கொண்டு அவர் அமைச்சரவையில் இடம் பிடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த ஜிதின் பிரசாதா?
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் ஜிதின் பிரசாதா. உ.பி.யை சேர்ந்த இவர் ஒரு காலத்தில் ராகுல் காந்திக்கு மிகவும் நெருங்கியவராக இருந்தார். இவர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக உ.பி. காங்கிரஸார் தீர்மானம் நிறைவேற்றினர். இதனால் அவர் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
தனது முடிவு குறித்து அவர் கூறுகையில், "காங்கிரஸுடன் எனக்கு மூன்று தலைமுறை தொடர்பு உள்ளது. பல்வேறு ஆலோசனைக்கு பிறகே இந்த முடிவுக்கு வந்துள்ளேன். அமைப்பு ரீதியாக செயல்படும் ஒரே கட்சியாக பாஜக உள்ளது. தேசிய கட்சியாக பாஜக மட்டுமே உள்ளது.
காங்கிரசில் பணியாற்றும் போது மக்களுக்காக உழைக்க முடியவில்லை. ஒரே குடும்பத்தினரால் இயக்கப்படும் கட்சியாக பாஜக இல்லை. எந்த கட்சியில் இருந்தேன், எந்த கட்சியில் இணைந்துள்ளேன் என்பது முக்கியமல்ல.
ஆனால் மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதே முக்கியம்" என்று பேசியிருந்தது நினைவுகூரத்தக்கது.