இந்தியா

எதிர்காலத்தில் 3-ம் தவணை கரோனா தடுப்பூசி பரிந்துரைக்கப்படும்: என்ஐவி இயக்குநர் தகவல்

செய்திப்பிரிவு

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் மகாராஷ்டிராவின் புனே நகரில் தேசிய வைராலஜி ஆய்வு நிறுவனம் (என்ஐவி) செயல்படுகிறது. இதன் தலைவர் பிரியா ஆபிரகாம், தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

பெரும்பாலான கரோனா தடுப்பூசிகள் 2 தவணைகளாக செலுத்தப்படுகிறது. ஊக்க தடுப்பூசியாக 3-ம் தவணை தடுப்பூசி செலுத்தும் பரிசோதனை உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. எனினும் பெரும்பாலான நாடுகளில் இன்னும் முதல் தவணை தடுப்பூசியே போடப்படாத நிலையில் 3-ம் தவணை தடுப்பூசி திட்டத்தை உலக சுகாதார அமைப்பு நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவில் எதிர்காலத்தில் 3-ம் தவணை கரோனா தடுப்பூசி நிச்சயமாக பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புனேவை சேர்ந்த சீரம் நிறுவன தலைவர் சைரஸ் பூனவாலா, 3-ம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, "தடுப்பூசிகள் 6 மாதங்கள் வரை மட்டுமே முழுமையான பலன் அளிக்கும். அதன்பிறகு வீரியம் குறையும். எனவே 3-ம் தவணை கரோனா தடுப்பூசி போட்டுள்ளேன். எனது நிறுவனத்தில் பணியாற்றும் 8,000 ஊழியர்களுக்கும் 3-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT