இந்தியா

சியாச்சின் பனிச்சரிவில் சிக்கிய வீரர் உயிர் பிழைத்தது எப்படி?

செய்திப்பிரிவு

சியாச்சின் முகட்டில் பனிச்சரிவில் சிக்கி 25 அடி ஆழத்தில் புதைந்திருந்த ராணுவ வீரர் 6 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவர் 6 நாட்களாக பனிச்சரிவின் கீழ் 25 அடி ஆழத்தில் அவர் உயிருடன் இருக்க ஏர் பாக்கெட் (காற்றடைப்பகம்) காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த ஏர் பாக்கெட்டானது அவருக்கும் அவரை சுற்றி சுவர் போல் இருந்த பனிக் கட்டிகளும் இடையே இன்சுலேட்டராக செயல்பட்டிருக்கிறது எனக் கூறப்படுகிறது.

ஆஸ்திரியா நாட்டில் பனிச் சரிவில் சிக்கி மீண்டவர்கள் குறித்து இன்ஸ்பர்க் பல்கலைக்கழகம் ஓர் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில், பனிச் சரிவில் சிக்கியும் சிலர் உயிர்பிழைக்க பனிக் கட்டிகளுக்கு இடையே ஏற்படும் ஏர் பாக்கெட்டுகள் காரணமாக இருக்கும் எனக் கூறப்பட்டது.

அந்த ஆய்வு முடிவுகளை வைத்து பார்க்கும்போது அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஏர் பாக்கெட் (காற்றடைப்பகம்) ஹனுமந்தப்பா உயிர் பிழைக்க காரணமாக இருந்திருக்க வேண்டும்.

பொதுவாக பனிச் சரிவில் சிக்குபவர்கள் 15 நிமிடங்களுக்குள் மீட்கப்பட்டால் அவர்கள் உயிர் பிழைக்க 92% வாய்ப்பு உள்ளது. ஒன்றரை மணி நேரத்துக்குப் பின் கண்டறியப்பட்டால் அந்த நபர் உயிர் பிழைக்க வெறும் 35% மட்டுமே என அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

ஹனுமந்தப்பா, 25 அடி ஆழத்தில் இருந்தாலும் ஏர் பாக்கெட்டுகள் அவருக்கு தேவையான அளவிலான வெதுவெதுப்பை தந்திருக்கும். இதன் காரணமாகவே அவர் சுயநினைவுடன் இருந்திருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

பனிச்சரிவில் சிக்கி புதையுறும் நபர்கள் ஹைபோதெர்மியா எனும் உடல் உஷ்னம் மிக மிக குறையும் சூழலுக்கு தள்ளப்பட்டு உடல் உள் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழந்து மாரடைப்பால் இறந்து போவர்.

ஆனால், 25 அடி ஆழத்தில் சிக்கியும் ஏர் பாக்கெட்டுகளால் அதிர்ஷ்டவசமாக ஹனுமந்தப்பா உயிர் தப்பியிருக்கிறார்.

SCROLL FOR NEXT