நாட்டில் 3.86 கோடிக்கும் அதிகமான மக்கள் தங்களுக்குரிய காலக்கெடு வந்தபோதிலும் இன்னும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
கோவின் தளத்தின் மூலம் வியாழக்கிழமை பிற்பகல் வரை கிடைத்த தகவலின்படி, 44 கோடியே 22 லட்சத்து 85 ஆயிரத்து 854 பேர் முதல் டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளார்கள். 12 கோடியே 59 லட்சத்து 7ஆயிரத்து 443 பேர் 2-வது டோஸ் செலுத்தியுள்ளனர்.
சமூக ஆர்வலர் ராமன் சர்மா, தகவல் அறியும உரிமைச் சட்டத்தின் மூலம் நாட்டில் எத்தனை பேர் கரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தியுள்ளார்கள், குறிப்பிட்ட நேரத்துக்குள் செலுத்தாதவர்கள் யார் என்பது குறித்துக் கேட்டிருந்தார். அதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கரோனா தடுப்பூசி நிர்வாக அமைப்பு பதில் அளித்துள்ளது.
அதில், ''கரோனா கோவிஷீல்ட் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக்கொண்டவர்கள் 84 நாட்கள் முதல் 112 நாட்களுக்குள் 2-வது டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும். கோவாக்சின் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தியவர்கள், 28 முதல் 42 நாட்களுக்குள் 2-வது டோஸ் செலுத்த வேண்டும்.
கோவிஷீல்ட் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக் கொண்டவர்களில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் 2-வது டோஸ் செலுத்தாமல் இருப்போர் எண்ணிக்கை கோவின் தளத்தின் அறிக்கையின்படி, கடந்த 17-ம் தேதி நிலவரப்படி 3 கோடியே 40 லட்சத்து 72 ஆயிரத்து 993 பேர் உள்ளனர்.
கோவாக்சின் முதல் டோஸ் செலுத்திக் கொண்டவர்கள் 2-வது டோஸ் தடுப்பூசியைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்தாதவர்கள் கோவின் தளத்தின் அறிக்கையின்படி, 46 லட்சத்து 78 ஆயிரத்து 406 பேர் உள்ளனர்.
முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் அந்தக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் 2-வது தடுப்பூசி கண்டிப்பாகச் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் 2-வது தடுப்பூசி செலுத்தத் தவறினால், அவர்களுக்கு மீண்டும் முதல் தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு எந்த அறிவுறுத்தலும் கூறவில்லை. மத்திய அரசின் அறிவுரைப்படி, இரு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தினால்தான் தடுப்பூசியின் முழுமையான பலனை உணர முடியும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.