நாடுமுழுவதும் 2 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் அண்மைகாலமாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கிருந்து மக்கள் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் கரோனாவை கட்டுப்படுத்த மத்திய குழு அங்கு சென்று ஆய்வு நடத்தியது. கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என கேரள அரசுக்கு மத்திய குழு பரிந்துரைத்துள்ளது.
ஓணம் பண்டிகைக்காக கடைகளை திறக்க அனுமதி வழங்கினாலும் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பொது இடங்களுக்கு செல்பவர்கள் குறைந்த பட்சம் இரண்டு வாரத்துக்கு முன், முதல் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும் அல்லது 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை செய்து இல்லை என்பதை உறுதிபடுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
இந்தநிலையில் கேரள சுகாதாரத்துறை செயலர் வீணா ஜார்ஜ் டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கேரளாவில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அங்கு 2 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள தகவல் வெளியாகியது.
இதனை மத்திய சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கேரளாவில் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களில் 80 ஆயிரம் பேருக்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேசமயம் நாடுமுழுவதும் 2 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தியவர்களில் 87 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் தெரிகிறது.
எனினும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. இதனிடையே கேரளாவில் கரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் அதன் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.