ஆப்கானிஸ்தான் தலிபான் ஆதிக்கத்துக்குள் சென்றபின், பாகிஸ்தான் வழியாக இந்தியாவிலிருந்து ஏற்றுமதி, இறக்குமதி அனைத்தையும் நிறுத்திவிட்டனர் என்று இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (எப்ஐஇஓ) தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறிபின், அங்கிருக்கும் பெரும்பாலான மாகாணங்களை லிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். தலைநகர் காபூலில் தலிபான்கள் நுழைந்ததை அறிந்த அதிபர் அஷ்ரப் கனி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தப்பி ஓடிவிட்டார். காபூலில் அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய தலிபான்கள் ஆட்சி அமைக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் வரலாற்று ரீதியாக நீண்ட உறவுகள் இருக்கின்றன குறிப்பாக வர்த்தகத்தில் நீண்ட உறவு இருக்கிறது. இரு தரப்பு மக்களும் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து ஆடைகள், மருந்துகள், சர்க்கரை, காபி, வாசனைப் பொருட்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆப்கனிலிருந்து பெரும்பாலும் உலர் பழங்கள், பருப்பு வகைகள், வெங்காயம், தாதுக்கள் போன்றவை இறக்குமதியாகின்றன.
இந்நிலையில் ஆப்கனில் தலிபான்கள் ஆதிக்கம் வந்தவுடன் பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கான ஏற்றுமதி, இறக்குமதியை நிறுத்திவிட்டனர்.
இதுகுறித்து இந்தய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பின் இயக்குநர் அஜய் சாஹே கூறியதாவது:
ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கும், இங்கிருந்து அந்நாட்டுக்கும் பாகிஸ்தான் வழியாக ஏற்றுமதி , ஏற்றுமதி வர்த்தகம் ட்ரக்குகள் மூலம் இருந்து வந்தது. ஆனால், ஆப்கனில் தலிபான்கள் ஆதிக்கம் வந்தபின் ஏற்றுமதி, இறக்குமதியை நிறுத்திவிட்டனர்.
ஆப்கானிஸ்தான் உள்ள நிலவரங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பாகிஸ்தான் வழியாகவே பெரும்பாலும் இறக்குமதி நடக்கிறது. தற்சயம், பாகிஸ்தானிலிருந்து வரும் சரக்கு வாகனங்கள் அனைத்தையும் தலிபான்கள் நிறுத்திவிட்டனர்.
ஏற்றுமதியைப் பொறுத்துவரை சர்வதேச வழிச்சாலையின் வழியே சில பொருட்கள் மட்டும் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சில பொருட்கள் துபாய் சென்று அங்கிருந்து ஆப்கனுக்கு இறக்குமதியாகிறது.
ஆப்கானிஸ்தானுடன் நீண்ட வர்த்தகம்,முதலீடு, ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 2021ம்ஆண்டில் இதுவரை 8.35 கோடி டாலருக்கு வர்த்தகம் நடந்துள்ளது. 5.10 கோடி டாலர் அளவுக்கு பொருட்களை இறக்குமதி செய்துள்ளோம்.
ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் தவிர்த்து, முதலீடுகளும் அதிகமாக இந்தியர்கள் செய்துள்ளனர். ஏறக்குறைய 300 கோடி டாலர் அளவுக்கு ஆப்கனில் இந்தியர்கள் முதலீடு செய்துள்ளனர், இந்தியர்கள் சார்பில் ஏறக்குறைய 400 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பெரும்பாலும் உலர் பழங்கள், விலை உயர்ந்து பருப்பு வகைகள்தான் பெரும்பாலும் ஆப்கனிலிருந்து இறக்குமதியாகிறது. மேலும், சீசன் நேரத்தில் வெங்காயம் அதிகமாக இறக்குமதியாகும்.
சிறிது காலத்தில் ஆப்கானிஸ்தான் தன்னுடைய பொருளாதார மேம்பாடு குறித்து உணரத் தொடங்கும், வர்த்தகம் மட்டும்தான் முன்னேறிச் செல்ல ஒரே வழி. ஆப்கானிஸ்தானிலுருந்து உலர் பழங்கள் இறக்குமதி தடைபட்டுள்ளதால், வரும் நாட்களில் உலர் பழங்கள் விலை அதிகரிக்கலாம்.
இவ்வாறு சாஹே தெரிவித்தார்.