இந்தியா

தலிபான்களுக்கு ஆதரவாக கருத்து: சமாஜ்வாதி கட்சி எம்.பி. மீது தேசத் துரோக வழக்கு பதிவு

செய்திப்பிரிவு

தலிபான்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தாகக் கூறி சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஷஃபிக்யுர் ரஹ்மான் பார்க் மீது உத்தர
பிரதேச போலீஸார் தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல், தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது. இதனால் அங்கு விரைவில் தலிபான்
ஆட்சி அமையவுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து சமாஜ்வாதி எம்.பி. ஷஃபிக்யுர் ரஹ்மான், செய்தியாளர்களுக்கு கடந்த திங்கள்கிழமை பேட்டியளித்தார். அதில், ஆப்கானிஸ்தானின் விடுதலைக்காக தலிபான்கள் போராடி வருவதாகவும் இதில் இந்தியா தலையிடக் கூடாது என்றும் அவர்கூறியிருந்தார். மேலும், "இந்திய சுதந்திரத்துக்காக போராடிய வீரர்களைப் போலவே தலிபான்களும் தற்போது போராடி வருகின்றனர்" எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில், தலிபான்களுக்கு ஆதரவாக ஷஃபிக்யுர் ரஹ்மான் கருத்து தெரிவித்தாகக் கூறி, சம்பல் மாவட்ட எஸ்.பி.யிடம் நேற்று ஒருவர் புகார் அளித்தார். இதையடுத்து, அம்மாவட்ட எஸ்.பி. சர்கேஷ் மிஸ்ரா உத்தரவின் பேரில், ஷஃபிக்யுர் ரஹ்மான் மீது போலீஸார் தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து எஸ்.பி. சர்கேஷ் மிஸ்ரா கூறும்போது, “இந்திய அரசாங்கத்தை பொறுத்தவரை தலிபான் ஒரு தீவிரவாத இயக்
கம். அப்படியிருக்கையில், தலிபான்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பது குற்றமாகும். இதன் அடிப்படையிலேயே அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

SCROLL FOR NEXT