தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகல்வெட்டு தகவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இணையதளத்தில் வெளியிடும் பணியில் இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகத்தின் கல்வெட்டியல் பிரிவு இறங்கியுள்ளது.
இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகத்தின் (ஏஎஸ்ஐ) கல்வெட்டியல் பிரிவு மைசூரில் உள்ளது. இது,நாடு முழுவதிலும் கண்டு எடுக்கப்படும் கல்வெட்டுகளை படி எடுத்தல் முறையில் காகித நகல் எடுத்து சேமிக்கிறது. இவற்றை மொழிபெயர்த்து ஆங்கிலத்தில் தொகுப்பு நூல்களாகவும் வெளியிடுகிறது. இதில் அதிகமாகக் கிடைத்து வரும் தமிழ் கல்வெட்டுகள், முறையாகப் பதிப் பிக்கப்படுவதில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணையில் உள்ளது.
அதேசமயம் கல்வெட்டு தகவல்களை படிக்கும் கல்வெட்டியலாளர் கள் அந்த அலுவலகத்தில் போதுமான அளவில் இல்லை. மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட 758 காலிப் பணியிட அறிவிப்பில் கல்வெட்டியலாளர் முற்றிலும் இல்லை.
இதனால், கல்வெட்டியல் துறை மூடப்படுவதாக புகார்எழுந்தது. இந்தச் சூழலில் தமிழகதொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘‘மைசூரிலுள்ள தமிழ் கல்வெட்டுகள் அனைத்தும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்’’ என கடந்த வாரம் கூறியிருந்தார்.
காகித நகல்கள்
இது நடைமுறையில் சாத்திய மல்ல எனத் தெரிய வந்துள்ளது. ஏனெனில், மைசூரின் ஏஎஸ்ஐ அலுவலகத்தில் எந்தவிதமான கல்வெட்டுகளும் இல்லை. மாறாக அதிலிருந்து படி எடுக்கப்பட்ட காகித நகல்கள் மட்டுமே உள்ளன. இப்பணிக்காகவே மைசூரின்கல்வெட்டியல் துறை இயங்குவதால் அவற்றை தமிழக அரசிடம் ஒப்படைப்பது சாத்தியமில்லை எனக் கருதப்படுகிறது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ஏஎஸ்ஐயில் பணியாற்றி ஓய்வுபெற்ற கல்வெட்டிய லாளர்கள் வட்டாரங்கள் கூறும்போது, “முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கடைசி ஆட்சியில் இதேபோல் தமிழ் கல்வெட்டுகள் மீது சர்ச்சை கிளம்பியது. அப்போது முதல்வர் கருணாநிதி மைசூரிலுள்ள தமிழ் கல்வெட்டு களின் காகித நகல்கள் படம் எடுக்கப்பட்டு, டிஜிட்டல் முறையில் தொகுக்கப்படும் என அறிவித்தார்.
இப்பணியை தஞ்சையின் தமிழ் பல்கலைக்கழகம் செய்யும் எனக் கூறி அதற்காக ரூ.10 லட்சம் நிதியும் ஒதுக்கியிருந்தார். இந்த நிதியிலிருந்து கேமரா மட்டுமே வாங்கப்பட்டதே தவிர வேறு எந்தப்பணியும் நடைபெறவில்லை. அப்போது மத்தியில் திமுகவின் கூட்டணி ஆட்சி இருந்தும் மைசூரின் அலுவலகத்தை முன்பிருந்த ஊட்டிக்கு மாற்றவும் முடியாமல் போனது” என்று தெரிவித்தன.
இந்நிலையில் மைசூரு அலுவலகத்தில் தமிழ் கல்வெட்டு நகல்களை படிக்கும் பணியில் ஓய்வுபெற்ற கல்வெட்டியலாளர்கள் ஈடுபடுத்தப் படுகின்றனர். இத்தகவல்களை ஆங்கில மொழிபெயர்ப்புடன் தனது இணையதளத்தில் பதிவேற்றும் முயற்சியில் மைசூருஏஎஸ்ஐ அலுவலகம் இறங்கியுள்ளது. இந்த பதிவேற்றத்துக்கு பிறகு அவற்றை இலவசமாக படிக்கும் வசதி செய்யப்பட உள்ளது.
இவற்றை யார் வேண்டுமாலும் மத்திய அரசின் ஏஎஸ்ஐ இணையதளத்தில் படிக்கலாம். தற்போது மொழிபெயர்க்கப்படும் தகவல்களுடன் இதற்கு முன் தொகுக் கப்பட்ட தமிழ் கல் வெட்டு தகவல்களும் அதில் இடம்பெற உள்ளன. இதுதவிர சம்ஸ்கிருதம் உள்ளிட்ட பிறமொழி கல்வெட்டு தகவல்களும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் அந்த இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.
தற்போது, மொழி பெயர்க் கப்பட்ட கல்வெட்டு தகவல் தொகுப்புகள் மத்திய அரசால் நூலாக அச்சிடப்பட்டு ஏஎஸ்ஐ அலுவலகங்களில் விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.