இந்தியா

‘‘நான் அப்படி சொல்லவில்லை; ஆப்கன் குடிமகன் அல்ல’’ - பின் வாங்கினார் சமாஜ்வாதி எம்.பி.

செய்திப்பிரிவு

எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது, நான் இந்தியாவின் குடிமகன். ஆப்கானிஸ்தான் குடிமகன் அல்ல என சமாஜ்வாதி கட்சி எம்.பி.ஷபிக்குர் ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியுள்ளனர்.

இந்தநிலையில் சமாஜ்வாதி கட்சி எம்.பி.ஷபிக்குர் ரஹ்மான் பாரக் தலிபான்களை ஆதரித்து கருத்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியா போராடி சுதந்திரம் பெற்றது. தலிபான்கள் தங்கள் நாடு சுதந்திரமடையவும், அந்நியர்களின் பிடியில் இருந்து விடுபடவும் போராடி வருகின்றனர். இப்போது வென்றுள்ளனர். தங்கள் நாட்டை தாங்களே வழி நடத்த விரும்புகின்றனர். இதில் என்ன தவறு இருக்க முடியும்’’ எனக் கூறினார்.

இதனையடுத்து சமாஜ்வாதி கட்சி எம்.பி.ஷபிக்குர் ரஹ்மான் மீது உ.பி. போலீஸார் தேசத்துரோக பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சமாஜ்வாதி கட்சி எம்.பி.ஷபிக்குர் ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார். அதில் தான் அவ்வாறு ஏதும் கூறவில்லை எனத் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:

‘‘நான் தலிபான்களை இந்திய சுதந்திர போராளிகளுடன் ஒப்பிட்டு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் இந்தியாவின் குடிமகன். ஆப்கானிஸ்தான் குடிமகன் அல்ல. அதனால் அங்கு என்ன நடக்கிறது என்று எனக்கு எந்த ஆர்வமோ, எண்ணமோ இல்லை. நான் எனது அரசின் கொள்கைகளை மட்டுமே ஆதரிக்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT