பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் அளித்த பதிலில், என்னவிதமான உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக பொதுவெளியில் வெளியிக்கூடாத தகவல் இருப்பதாக அரசாங்கம் கூறியது ஒப்புதல் வாக்குமூலம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் பெகாசஸ் மென்பொருள் மூலம் இந்தியாவி்ல் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட 300 பேரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணையில் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் நேற்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.
அதில் “ பெகாசஸ் போன்ற உளவுமென்பொருள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து பொதுவெளியில் பிரமாணப்பத்திரம் மூலம் வெளியிட முடியாது. இது தேசிய பாதுகாப்பு தொடர்பானது. எதிரிநாடுகள், தீவிரவாதச் செயல்கள் போன்றவை இருப்பதால், மென்பொருள்குறித்து கூறினால் அவர்கள் தங்களின் மென்பொருளில் மாற்றம் செய்யநேரிடும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சொலிசிட்டர் ஜெனரல் தாக்கல் செய்த பதில் மனுவைச் சுட்டிக்காட்டி, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் இரு கேள்விகளை மத்திய அரசுக்கு முன்வைத்துள்ளார். அதில் “வெளியே பொதுப்படையாக வெளியிடமுடியாத வகையில் மத்திய அரசிடம் தகவல் இருக்கிறது என சொலிசிட்டர் ஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளார். உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டது என்று கூறியுள்ளது ஒப்புதல் வாக்குமூலம். எந்த காரணத்துக்காக மென்பொருள் பயன்படுத்தப்பட்டது என்பது எங்களுக்குத்தெரியாது.
நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், மத்திய அரசு பயன்படுத்திய மென் பொருள் பெகாசஸா? அப்படியென்றால், எந்த நோக்கத்துக்காக அந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டது? இந்த இரு கேள்விகளுக்கும் மத்திய அரசு பதில் அளித்தால், மற்ற கேள்விகளுக்கான பதில் சரியான நேரத்தில் பதில் அளிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.