கோப்புப்படம் 
இந்தியா

உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 பேர் தேர்வு: தலைமை நீதிபதியாக முதல் பெண்

பிடிஐ

உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் இடம் காலியாகியுள்ளதையடுத்து, 3 பெண் நீதிபதிகள் உள்பட 9 நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் அடங்கி கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்த 3 பெண் நீதிபதிகளில் ஒருவரான கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதி நாகரத்னா 2027-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக வரக்கூடும். அவ்வாறு தலைமை நீதிபதியாக வந்தால், இந்திய வரலாற்றில் முதல் பெண் தலைமை நீதிபதியாக நாகரத்னா இருப்பார்.

கடந்த 2 ஆண்டுகளாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் பல்வேறு தாமதங்கள் நிலவி வந்தநிலையில் தற்போது கொலிஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

கடந்த 12-ம் தேதி உச்ச நீதிபதியாக இருந்த ஆர்எப் நாரிமன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து நீதிபதிகள் எண்ணிக்கை 25 ஆகக் குறைந்தது. 34 நீதிபதிகள் இருக்க வேண்டிய இடத்தில் 25 ஆகச் சரிந்தது. கடந்த 2019-ம் ஆண்டு, மார்ச் 19-ம் தேதி ரஞ்சன் கோகோய் ஓய்வு பெற்றுச் சென்றபின் இதுவரை எந்த நீதிபதிகள் நியமனமும் நடக்கவில்லை.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, மூத்த நீதிபதிகள் யு.யு.லலித், ஏஎம்கான்வில்கர், டிஒய் சுந்திரசூட், எல் நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய கொலிஜியம் 3 பெண் நீதிபதிகள் உள்ளிட்ட 9 நீதிபதிகள் அடங்கிய பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.

இதில் 3 பெண் நீதிபதிகளில் ஒருவரான கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா 2027ம் ஆண்டில் நாட்டின் தலைைம நீதிபதியாக வருவதற்கான வாய்ப்புள்ளது.

நீதிபதி நாகரத்னா தவிர்த்து, தெலங்கனா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பால திரிவேதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் நீதிபதிகள் அல்லாத ஒருவர் மூத்த வழக்கறிஞர், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், பிஎஸ் நரசிம்மா உச்ச நீதிமன்ற நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் தவிர, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அபெய் ஸ்ரீநிவாஸ், குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத், சிக்கம் உயர் நீதிமன்ற தலைைம நீதிபதி ஜிதேந்திர குமார் மகேஸ்வரி, கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிகுமார், மற்றொரு கேரள நீதிபதி எம்எம் சுந்தரேஷ் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

கொலிஜியம் அனுப்பிய 9 நீதிபதிகள் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை உச்ச நீதிமன்றத்தில் 33 ஆக உயரும். அடுத்தவாரம் புதன்கிழமை நீதிபதி நவின் சின்ஹா ஓய்வு பெற்றால், கூடுதலாக இடம் காலியாகும்.

SCROLL FOR NEXT