இந்தியாவில் கடந்த 148 நாட்களில் இல்லாத அளவாக கரோனாவில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 35,178 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக 35 ஆயிரத்து 178 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 22 லட்சத்து 85 ஆயிரத்து 857 ஆக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 67 ஆயிரத்து 415 ஆகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின் கரோனா தொற்று இந்த அளவுக்கு முதல் முறையாகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் 1.14 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
கரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து 923 பேர் குணமடைந்தனர், குணமடைந்தோர் சதவீதம் 97.52 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2431 பேர் கரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 440 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 32 ஆயிரத்து 519 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் 116 பேரும், கேரளாவில் 127 பேரும் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் இதுவரை 49 கோடியே 84 லட்சத்து 27 ஆயிரத்து 83 பேருக்கு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. செவ்வாய்கிழமை மட்டும் 17 லட்சத்து 97 ஆயிரத்து 559 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை நாட்டில் ஏறக்குறைய 56.06 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.