பெங்களூரு: கர்நாடக முதல்வராக எடியூரப்பா இருந்தபோது அவரது மகனும் பாஜக எம்எல்ஏவுமான விஜயேந்திரா பெரும்பாலான அரசு நிகழ்ச்சிகளில் முக்கிய பிரமுகராக பங்கேற்றார். இது சர்ச்சை ஏற்படுத்தியது.
இந்நிலையில், புதிய முதல்வர் பசவராஜ் பொம்மையின் மகன் பரத் பொம்மை அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றது தெரியவந்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையின் முக்கிய பிரமுகர்களான அசிம் பிரேம்ஜி, கிரண் மஜும்தார் ஷா, மோகன்தாஸ் பை உள்ளிட்டோர் அண்மையில் முதல்வர் பசவராஜ் பொம்மையை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது பரத் பொம்மையும் இருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறும்போது, "எடியூரப்பா வாரிசு அரசியலில் ஈடுபடுவதாக புகார் எழுந்ததாலேயே அவர் முதல்வர் பதவியை இழந்தார். எடியூரப்பாவின் வாரிசாக முதல்வர் பதவியேற்ற பசவராஜ் பொம்மையும் தனது மகனை அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்துள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறையின் முக்கிய பிரமுகர்கள் உடனான சந்திப்பில் முதல்வரின் மகனுக்கு என்ன வேலை?'' என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து மூத்த பாஜக நிர்வாகி கூறும்போது, “பசவராஜ் பொம்மையின் இந்த அணுகுமுறை தவறானது. மீண்டும் வாரிசு அரசியல் குறித்த விவாதம் ஏற்பட வழிவகுக்கும்'' என்றார்.