தமிழகத்தைச் சேர்ந்தவரும், ஆக்ராமாவட்ட தலைமை காவல் கண்காணிப்பாளருமான (எஸ்எஸ்பி) ஜி.முனிராஜுக்கு உத்தரபிரதேச அரசின் சுதந்திர தின விருது வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் சிறப்பாக பணிபுரியும் காவல்துறையினரை பாராட்டி, குடியரசுத் தலைவர் விருது வழங்கப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற விருதுகள் டிஜிபி சார்பில் வழங்கப்படுகின்றன. பிளாட்டினம், தங்கம், வெள்ளி ஆகிய மூன்று விருதுகளை அம்மாநில அரசு வழங்குகிறது. இவற்றில் ஆக்ரா எஸ்எஸ்பியான ஜி.முனிராஜுக்கு உயரிய விருதான பிளாட்டினம் விருது வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து, மூன்றாவது முறையாக உத்தரபிரதேச அரசின் விருதினை அவர் பெறுகிறார்.
சுதந்திர தினத்தன்று ஆக்ராவில் நடைபெற்ற விழாவில், ஏடிஜி ராஜீவ் கிருஷ்ணா இந்த விருதைமுனிராஜுக்கு வழங்கினார். முனிராஜின் அதிரடி நடவடிக்கைகளால் உத்தரபிரதேச மக்கள் அவரை‘உ.பி. சிங்கம்’ என அழைக்கின்றனர். கடந்த மார்ச் 28-ம் தேதி ஆக்ரா எஸ்எஸ்பியாக பதவி ஏற்ற அதிகாரி முனிராஜ், மூன்று முக்கிய வழக்குகளை உடனடியாக முடித்து வைத்தார்.
ஆக்ராவில் ஒரு நிதி நிறுவனத்தில் கடந்த மாதம் 17 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்களில் இருவர்என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டு,மற்றவர்கள் கைதாகினர். கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் மீட்கப்பட்டன. இதற்கு முன்பு சம்பல்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஆக்ரா மருத்துவரை 24 மணிநேரத்தில் முனிராஜ் தலைமையிலான போலீஸ் படை மீட்டது.
இதேபோல, பணத்திற்காக ஒரே குடும்பத்தில் தாய் மற்றும் மூன்று மகன்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கையும் சில மணி நேரத்திலேயே துப்பு துலக்கி குற்றவாளியை முனிராஜ் கைது செய்தார்.
கடந்த ஆண்டு அலிகர் மாவட்ட எஸ்எஸ்பியாக இருந்தபோதும், அவரது பணியை பாராட்டி அவருக்கு டிஜிபியின் வெள்ளி விருது வழங்கப்பட்டது.
புலந்த்ஷெஹரின் எஸ்பியாக இருந்த போது, முதன்முறையாக முனிராஜுக்கு டிஜிபியின் தங்க விருது கிடைத்தது.