இந்தியா

3-வது நினைவுநாள்: வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

செய்திப்பிரிவு

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவுநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமரும் பாரதிய ஜனதா கட்சியின் நிறுவனர்களில் ஒருவருமான அடல் பிஹாரி வாஜ்பாய் (93), வயது மூப்பு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி காலமானார்.

வாஜ்பாயின் 3-வது நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மரியாதை செலுத்தினார். மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “வாஜ்பாயின் ஆளுமை, இயற்கையை நேசிக்கும் தன்மை, நகைச்சுவையுடன் பேசும் திறமை மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணி ஆகியவற்றை நினைவுகூருகிறோம்.

நாட்டு மக்களின் மனங்களிலும் இதயங்களிலும் அடல்ஜி வாழ்ந்து கொண்டிருக்கிறார். இன்று (நேற்று) அவரது நினைவு தினத்தை முன்னிட்டு, ‘சதைவ் அடல்’ நினைவிடத்தில் மரியாதை செலுத்தினோம்” என பதிவிட்டு புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.- பிடிஐ

SCROLL FOR NEXT