சியாச்சின் பனிமலை பகுதியில் புதையுண்டு சிகிச்சை பெற்று வந்த ராணுவ வீரர் ஹனுமந்தப்பா (33) உயிரிழந்ததால் அவரது கிராமம் சோகத்தில் மூழ்கி உள்ளது.
நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த அவருக்கு இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
சியாச்சின் பனிச்சரிவில் 35 அடி ஆழத்தில் சிக்கிய ராணுவ வீரர் லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பா கொப்பாட் 6 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டார். டெல்லி யில் உள்ள ராணுவ மருத்துவ மனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஹனுமந்தப்பாவின் மரண செய்தி வெளியானதும் கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம் குண்ட கோல் அருகேயுள்ள பெடதூர் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.
இதையடுத்து பெடதூருக்கு வந்த கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர், முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், தார்வாட் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர சோழன், காவல் கண்காணிப்பாளர் தர்மேந்திர குமார் மீனா ஆகியோர் ஹனுமந்தப்பாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்த துடன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
இந்நிலையில், ஹனுமந்தப்பா வின் உடலுக்கு இன்று இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன. இதில் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்க இருப்பதால் பலத்த பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன.
3 முறை தோல்வி
லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பா கொப்பாட் ஏழை விவசாய குடும் பத்தை சேர்ந்தவர். சொந்த ஊரில் தொடக்கக் கல்வியை முடித்த இவர், உயர்கல்வி கற்பதற்காக தினமும் 6 கி.மீ. கரடு முரடான பாதையில் நடந்து சென்றார்.
பள்ளிப் படிப்பை முடித்த ஹனுமந்தப்பா ராணுவத்தில் சேர் வதற்காக தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டார். குடகு, தார்வாட், பீஜாப்பூர் ஆகிய இடங்களில் நடந்த ராணுவ ஆள் சேர்ப்பு முகா மில் கலந்துகொண்டு தொடர்ச்சி யாக 3 முறை தோல்வி அடைந்தார். இருப்பினும் மனம் தளராமல் போராடி கடைசியாக 2002-ம் ஆண்டு அக்டோடபர் 25-ம் தேதி மெட்ராஸ் ரெஜிமெண்டின் 19-வது பட்டாலியனில் சேர்ந்தார்.
ஒன்றரை வயதில் மகள்
ஹனுமந்தப்பா ராணுவத்தில் மிகவும் ஆர்வமாக பணியாற்றி வந்த நிலையில் அவரது தந்தை ராமப்பா கொப்பாட் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். பணி நெருக்கடி, விடுமுறை சிக்கல் ஆகியவை காரணமாக அவரது இறப்புக்கு கூட அவரால் வர இயலவில்லை. அதன் பிறகு ஊருக்கு வந்த ஹனுமந்தப்பாவுக்கு மஹாதேவி என்ற பெண்ணை அவரது குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தனர். இந்த தம்பதிக்கு தற்போது ஒன்றரை வயதில் நேத்ரா என்ற மகள் இருக்கிறாள்.
கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம் சியாச்சின் பனி சிகரத்தில் பணியாற்ற செல்வதற்கு முன்பாக, ஹனுமந்தப்பா தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். தனது நிலத்தில் மகளோடு சுற்றித் திரிந்த இவர் ஏராளமான புகைப்படங்களோடு ஜம்மு காஷ்மீருக்கு ரயிலேறினார். சியாச்சின் பனிசரிவு ஏற்படுவதற்கு முந்தைய நாள், தனது மனைவி மற்றும் மகளுடன் ஹனுமந்தப்பா பேசியதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.
மனைவி உருக்கம்
முன்னதாக சியாச்சினில் ஹனுமந்தப்பா மீட்கப்பட்ட செய்தி கேட்டு அவரது மனைவி மஹாதேவி, '' எனது கணவருக்கு இப்போது மறுபிறவி கிடைத்திருக்கிறது. இந்த பிறவியில் கடவுள் எனது உயிரை எடுத்துக்கொண்டு, அவருக்கு உடல் நலத்தை அளிக்க வேண்டும். அவர் மீண்டும் நாட்டுக்காக போராட வேண்டும்'' என மகிழ்ச்சியோடு கூறினார்.