ஆப்கானிஸ்தான் நாட்டின் பெரும்பகுதியைத் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதை அடுத்து, அந்நாட்டின் வான்வெளி மூடப்பட்டு விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று காபூல் சென்று, அங்கிருந்து இந்தியர்களை அழைத்துவரத் திட்டமிடப்பட்டிருந்த ஏர் இந்தியா விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து ஏர் இந்தியா தரப்பில் கூறுகையில், “ஆப்கானிஸ்தான் தனது வான்வெளியை மூடிவிட்டதால், இந்தியாவிலிருந்து காபூல் நகருக்கு எந்தவித விமானங்களும் இயக்கப்படாது” எனத் தெரிவிக்கப்பட்டது. முதலில் இன்று காலை 8.30 மணிக்கு விமானம் புறப்படுவதாக இருந்த நிலையில் நண்பகல் 12.30 மணிக்கு என மாற்றப்பட்டு அதுவும் ரத்து செய்யப்பட்டது.
ஏர் இந்தியா விமானத்தின் ஏஐ126 என்ற சிக்காகோ நகர் செல்லும் விமானம் ஆப்கானிஸ்தான் வழியாகச் செல்லாமல், வளைகுடா நாடுகள் வான்வெளியைப் பயன்படுத்திச் செல்கின்றன.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறத் தொடங்கியபின், ஆப்கன் அரசுப் படைகளுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. ஏராளமான மக்கள், குழந்தைகள் கொல்லப்பட்டனர். அந்நாட்டில் உள்ள 34 மாகணங்களில் முக்கியமான 15-க்கும் மேற்பட்ட மாகாணங்களைத் தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றினர்.
தலைநகர் காபூல் நகரையும் தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறினார். அதிபர் மாளிகையைக் கையகப்படுத்திய தலிபான்கள் அங்கு குழுமியுள்ளனர்.
காபூல் நகரில் உள்ள ஹமீது கர்சாய் விமான நிலையத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் விமானத்தில் செல்ல மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தலிபான்களிடம் சிக்கிச் சாவதைவிட, வேறு ஏதாவது நாட்டுக்குத் தப்பிவிடலாம் என மக்கள் வெளியேறி வருகின்றனர்.
இதனால் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதைக் கட்டுப்படுத்த போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே ஆப்கன் வான்வெளியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், காபூல் நகருக்கு இயக்கப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது. மேலும், விமானங்கள் வானில் 26 ஆயிரம் அடிக்குக் கீழ் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் தங்கள் விமானங்களை 25 ஆயிரம் அடிக்கு மேல் பறக்க அறிவுறுத்தியுள்ளன. இதனால் ஆப்கானிஸ்தான் வான்வெளியை அமெரிக்க ஏர்லைனஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ், விர்ஜின் அட்லான்டிக், எமிரேட்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்த மாட்டோம் எனத் தெரிவித்துள்ளன. மறு அறிவிப்பு வரும்வரை காபூல் நகருக்கு விமானங்கள் இயக்கப்படாது எனத் தெரிவித்துள்ளன.