கோப்புப்படம் 
இந்தியா

பெகாசஸ் விவகாரம்; ஆதாரமற்ற குற்றச்சாட்டு: விசாரணைக் குழு அமைக்கப்படும்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

பிடிஐ

இஸ்ரேலின் பெகாசஸ் மென்பொருள் மூலம் இந்தியர்களின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது, முழுமை பெறாத தகவல்கள் மூலம் முடிவுக்கு வந்துள்ளனர், ஊடகத்தின் தகவல்களை அடிப்படையாக வைத்தே வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்று மத்திய அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக சர்வதேச நாளேடுகள் தகவல் வெளியிட்டன.

இந்த விவகாரத்தைக் கடந்த 3 வாரங்களாக நாடாளுமன்றத்தில் எழுப்பிவரும் எதிர்க்கட்சிகள், நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், இந்த விவகாரத்தில் எந்தவிதமான ஒட்டுக்கேட்பும் நடக்கவில்லை, யாருடைய செல்போனும் கண்காணிக்கப்படவில்லை என்று மத்திய அரசு மறுக்கிறது.

இந்த விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி மூத்த பத்திரிகையாளர் என்.ராம், சசிகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, பத்திரிகையாளர் பரன்ஜாய் குஹா தாக்ருதா, எஸ்என்எம் அப்தி, பிரேம் சங்கர் ஜா, ரூபேஷ் குமார் சிங், இப்சா சடாக்ஸி ஆகியோர் தி எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூர்ய காந்த், அனிருத்தா போஸ் ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. மூத்த பத்திரிகையாளர் என்.ராம், எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா, சசிகுமார் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகியுள்ளார். மத்திய அரசுத் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகியுள்ளார்.

இந்த வழக்கில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இன்று 2 பக்க அளவில் பதில் மனுத்தாக்கல் செய்தார்.

அதில் கூறியிருப்பதாவது:

''பெகாசஸ் விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் என்பது உயர்ந்த தொழில்நுட்பம் சார்ந்த விஷயம். ஆதலால், வல்லுநர்கள் குழுவின் மூலம் ஆய்வு செய்வது அவசியம்.

இஸ்ரேலின் பெகாசஸ் மென்பொருள் மூலம் இந்தியர்கள் செல்போன் உளவு பார்க்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. முழுமையான தகவல் இன்றி முடிவுக்கு வந்துள்ளனர். ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த வழக்குத் தொடர்பட்டுள்ளது.

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி உபாத்யாயா ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளார். தனிப்பட்ட நலன்களுக்காக தவறான தகவல்கள் பரப்பிவிடப்படுகின்றன. அனைத்துவிதமான குற்றச்சாட்டுகளையும் எந்தவிதமான சந்தேகத்துக்கும் இடமின்றி மறுக்கிறோம்''.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நாளை மீண்டும் விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT