இந்தியா

கருப்புப் பண தகவல் அளிக்க வங்கிகளுக்கு உத்தரவு

செய்திப்பிரிவு

கருப்புப் பண மீட்பு புலனாய்வுக் குழு கோரும் தகவல்கள், ஆவணங்களை அனைத்து வங்கிகளும் நிதி நிறுவனங்களும் உடனடியாக வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி திங்கள்கிழமை ஓர் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. நாடு முழு வதும் உள்ள அரசுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அந்த அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கருப்புப் பணத்தை மீட்பது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் உயர்நிலை புலனாய்வுக் குழுவை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அமைத்தார். இந்தக் குழு ஜூன் 2-ம் தேதி முதல் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

குறிப்பாக சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டு இந்தியா கொண்டு வருவது தொடர்பாக எம்.பி.ஷா குழு ஆய்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில் கருப்புப் பண விவகாரத்தில் இந்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாக சுவிட்சர்லாந்து அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

பிரசாந்த் பூஷண் கடிதம்

கருப்புப் பணம் பெருகு வதை தடுக்கவும், அதை வெளிக் கொண்டு வரவும் தேவையான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பிரசாந்த் பூஷண் திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

அவரது 6 பக்க கடிதத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: சட்டவிரோத பணத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பி அவற்றை சட்டப்பூர்வமாக மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வரும் வழிகள் நமது பொருளாதார அமைப்பிலும் சட்டங்களிலும் உள்ளன. நமது நாட்டில் கருப்புப் பணம் பெருகுவதற்கு இதுவே முக்கிய காரணம்,

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணம், இந்த முறையில், நேரடி அந்நிய முதலீடு என்ற பெயரில் மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது.

கருப்புப் பணம் ஊழல் வழி யாக உருவாகிறது. மேலும் நிறுவனங்கள் தங்களின் விற்பனையை அல்லது சேவைக் கட்டணங்களை அதிகமாகவோ, குறைத்தோ காட்டுவதால் உருவாக்கப்படுகிறது.

ஊழலுக்கு எதிரான ஐ.நா. பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளபடி, சில சாதாரண மாற்றங்களை நமது சட்டங்களில் செய்தால் இப்பிரச்சினையை சரிசெய்ய முடியும். இவ்வாறு பிரசாந்த் பூஷண் தமது கடிதத்தில் கூறியுள்ளார்.

இந்தக் கடிதத்தின் நகல்களை, கருப்பு பண சிறப்புப் புலனாய்வுக் குழு மற்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு அனுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT