இந்தியா

எரிசக்தி உற்பத்தியில் சுயசார்பை எட்ட இலக்கு - பிரதமர் மோடி

செய்திப்பிரிவு

டெல்லியில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

எரிசக்தி உற்பத்தியில் இந்தியா இன்னமும் தன்னிறைவை எட்டவில்லை. ஆண்டுதோறும் எரிசக்தி தேவைக்காக ரூ.12 லட்சம் கோடி செலவிடப்படுகிறது.எரிசக்திக்கு இவ்வளவு அதிக தொகை செலவிடுவது சரியல்ல. சுயசார்பு கொள்கையான 'ஆத்மநிர்பாரத்' உருவாக்கத்தில் எரிசக்தியில் தன்னிறைவு பெறுவதும் மிகவும் முக்கியமானது.

எனவே, நாடு சுதந்திரமடைந்து 100 ஆண்டுகளை எட்டுவதற்குள் எரிசக்தி உற்பத்தியில் தன்னிறைவை எட்ட வேண்டும் என்பதே நமது இலக்காகும். இதற்காக தேசிய ஹைட்ரஜன் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் ஹைட்ரஜன் தேவை நிறைவு செய்யப்படுவதோடு, பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா வளரும்.

தேசிய ஹைட்ரஜன் கொள்கை

இப்போது நிர்ணயித்துள்ள இலக்கானது மிகப்பெரிய லட்சிய நோக்கத்துக்கானது. இந்த இலக்கை எட்டும்போது இந்தியா அபரிமிதமான வளர்ச்சியை எட்டியிருக்கும். சுத்தமான எரிசக்திக்கு வழிவகுக்கும் ஹைட்ரஜன் உற்பத்திக்கென தேசிய ஹைட்ரஜன் கொள்கை, இந்த சுதந்திர நாளில் உருவாக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.

சமீபத்தில் இந்தியா வெளியிட்டுள்ள பழைய வாகன அழிப்புக் கொள்கை யானது சுற்றுச் சூழல் பாதுகாப்பில் மற்றொரு மைல்கல் திட்டமாகும். ஜி-20 நாடுகளில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு இலக்கை விரைவாக எட்டிவரும் நாடாக இந்தியா விளங்குகிறது.

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் இல்லா சூழலை உருவாக்கும் முயற்சியில் முதல் கட்டமாக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். - பிடிஐ

SCROLL FOR NEXT