டெல்லியில் வாகன கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டு வர அர்விந்த் கேஜ்ரிவால் அரசு திட்டமிட்டு வரும் வேளையில், இதில் பிரதமர், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட விவிஐபி.களையும் சேர்ப்பது குறித்து மக்களின் கருத்தை அறிய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் சர்ச்சைக்கு வழிவகுக்கும் என்று தெரிகிறது.
டெல்லியில் காற்று மாசு மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைப் பதற்காக, ஒற்றைப்படை, இரட் டைப் படை பதிவு எண் வாகன கட்டுப்பாட்டு முறை, கடந்த ஜனவரி 1 முதல் 15 வரை சோதனை முறை யில் அமல்படுத்தப்பட்டது. இத் திட்டத்தை மேம்படுத்தி, வரும் மார்ச் மாதம் மீண்டும் செயல்படுத் துவது குறித்து கேஜ்ரிவால் அரசு ஆலோசித்து வருகிறது.
கடந்த முறை வாகன கட்டுப் பாட்டில், குடியரசுத் தலைவர், பிரதமர், மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை தலைவர், மத்திய அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கள், மாநில ஆளுநர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்ட விவிஐபி.களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வாகன கட்டுப் பாட்டை மீண்டும் அமல்படுத்தும் போது, இவர்களின் வாகனங்களுக் கும் கட்டுப்பாடு விதிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து மக்களின் கருத்தை அறிய ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது. வரும் 6, 7 ஆகிய தேதிகளில் டெல்லியின் அனைத்து தொகுதி களிலும் மக்கள் சபை என்கிற ‘ஜன் சபா’க்களில் இதன் மீதான விவாதம் நடைபெற உள்ளது. ஒருவேளை விவிஐபிக்களுக்கும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என மக்கள் விரும்பினால் அது பற்றி ஆலோசிக்க கேஜ்ரிவால் விரும்புவதாகக் கூறப்படுகிறது.
டெல்லியின் அனைத்து தொகுதி களிலும் இந்த மக்கள் சபைகளை கூட்டுமாறு ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்களுக்கு துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து ‘தி இந்து’விடம் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி ஒருவர் கூறும்போது, “மக்கள் சபைகளில் அனைத்து தரப்பு மக்களையும் கூட்டுமாறு கட்சி எம்எல்ஏ.க் களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விவிஐபி வாகனங்களுக்கு விலக்கு அளிக்கக் கூடாது என மக்கள் முடிவு செய்து, அதற்கு விவிஐபி.களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பி னால் அவர்களை விமர்சனத்துக்கு உள்ளாக்குவதே இதன் பின்னணி யில் உள்ள திட்டம். இதில் குறிப்பாக பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் குறி வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
குடியரசுத் தலைவர், பிரதமரின் பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் எந்த மாநில அரசும் தலையிட முடியாது என்றும் பாதுகாப்பு படையினர் தங்கள் வசதிக்கு ஏற்ப பாதுகாப்பு திட்டம் வகுக்கலாம் என்றும் கூறப்படு கிறது. மத்திய அமைச்சர்களில் சிலருக்கு இசட் மற்றும் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இவர்கள் அனைவரின் வாகனங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிப்பது டெல்லி அரசால் முடியாத காரியம் என்று கூறப்படுகிறது. எனவே மக்கள் சபை விவாதங்கள் பல்வேறு அரசியல் சர்ச்சைகளுக்கு வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்தமுறை பெண்கள் தனியே ஓட்டிவரும் கார்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. மூத்த குடிமக்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படாதது விமர்சனத்துக்கு உள்ளானது. இம்முறை மூத்த குடிமக்கள் மற்றும் பள்ளியில் குழந்தைகளை கொண்டுவிடும் பெற்றோர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மக்கள் சபை விவாதங்களுடன் 6 வகை கேள்விகளுக்கு பொதுமக்களிடம் இருந்து மின்னஞ்சலிலும் பதில்கள் பெறப்பட உள்ளன. இரண்டாவது சோதனை முறையிலான வாகன கட்டுப்பாட்டை எந்த தேதியில் தொடங்குவது என்பதும் மக்களின் முடிவுக்கு விடப்படும். இதற்காக பிப்ரவரி 14, மார்ச் 1, ஏப்ரல் 1, மே 1 ஆகிய 4 தேதிகளில் ஒன்றை தேர்வு செய்யுமாறு கேட்கப்படும்.