ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதி ஒருவரை போலீஸார் வெள்ளிக் கிழமை கைது செய்தனர். இந்த அமைப்பைச் சேர்ந்த மற்றொரு தீவிரவாதியின் சடலம் கண்டெடுக் கப்பட்டது.
இதுகுறித்து காவல் துறை செய்தித்தொடர்பாளர் கூறிய தாவது:
குல்காம் மாவட்டம் யாரிபோரா பகுதியில் உள்ள சினிகம் கிரா மத்தில் திறந்தவெளியில் இருந்து குண்டு காயங்களுடன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இவர் சங்குஸ் கிராமத்தைச் சேர்ந்த ஜாகிர் சையத் பட் என்பதும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் சார்பில் செயல்பட்டு வந்தார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, இவரது மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் யாரிபோரா பகுதியில் உள்ள ஷம்போரா கிராமத்தில் பதுங்கியிருந்த நவீத் ஜாட் என்ற அபு ஹன்சுல்லாவை கைது செய்துள்ளோம். லஷ்கர் அமைப்பின் மாவட்ட தளபதியான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக தெற்கு காஷ்மீரில் செயல்பட்டு வந்துள்ளார்.
இவரிடமிருந்து ஏகே 47 ரக துப்பாக்கி உள்ளிட்டவற்றை கைப்பற்றி உள்ளோம். முன்னா மற்றும் சோட்டு ஆகிய பெயர்களிலும் இவர் செயல்பட்டு வந்துள்ளார்.
புல்வாமாவில் மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்கு அருகே சமீபத்தில் 2 போலீஸார் கொல்லப்பட்டது, ஷோபியானில் போலீஸ் குழுவினர் மீது நடத்திய தாக்குதலில் 5 பேர் காயமடைந்தது ஆகிய சம்பவங்களில் இவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.