விரைவாகப் பள்ளிக்கூடங்களைத் திறக்க மத்திய அரசுக்கும் , மாநில அரசுகளுக்கும் உத்தரவிட வேண்டும் எனக் கோரி 12-ம் வகுப்பு மாணவி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் நாட்டில் கரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக நாடுமுழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் மட்டும் 10, 12ம் வகுப்புத் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்தது. ஆனால், மாணவர்கள் சிலர் கரோனாவில் பாதிக்கப்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்ைக நடவடிக்கையாக பள்ளி்க்கூடங்கள் மூடப்பட்டன.
இதனால், கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகள் நடக்காமலேயே மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். மத்தியஅரசின் அறிவிப்பைத் தொடர்ந்து பல மாநிலங்களும் இதையே கடைபிடித்தன.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டிலேயே ஆன்-லைன் வகுப்புகளைப் படித்து முடங்கி இருக்கும் மாணவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த சூழலில் டெல்லியைச் சேர்ந்த 12ம்வகுப்பு மாணவி ஒருவர் வழக்கறிஞர் அமர் பிரேம் பிரகாஷ் என்பவர் மூலம் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்கள்உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். வறுமை நிலையில் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஆன்-லைன் வகுப்பிற்குத்தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால், குழந்தைகளுக்கு கல்வி என்ற அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது.
ஏற்கெனவே வறுமையில் வாடிய ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் ஆன்-லைன் வகுப்புச் செல்ல முடியாமல், குழந்தை தொழிலாளர் நிலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளால் ஆன்-லைன் வகுப்புக்கு பணம் செலுத்தவும் முடியவில்லை, தனியாக டியூஷன் வைத்துக்கொள்ளவும் இயலவில்லை.
ஆதலால், பள்ளிகளை விரைவாக திறந்து மாணவர்கள் நேரடியாக வகுப்புகளுக்குச் செல்ல மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உத்தரவுோ அல்லது வழிகாட்டலோ வகுக்க வேண்டும். இன்னும் காலம் தாழத்தாமல், முழுமையான, விரைவான முடிவை பள்ளி திறப்பு குறித்து எடுக்கவேண்டும். இது நாடுமுழுவதும் உள்ள மாணவர்கள் மனநிலை, உணர்வு குறித்த விவகாரம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.