காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி | கோப்புப்படம் 
இந்தியா

முடக்கம் முடிந்தது: ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு செயல்பாட்டுக்கு வந்தது

பிடிஐ

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு கடந்த ஒரு வாரமாக முடக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அன்-லாக் செய்யப்பட்டது.

ட்விட்டர் நிறுவனத்தின் மீது ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறி விமர்சித்திருந்த நிலையில் இன்று அவரின் கணக்கு ரிலீஸ் செய்யப்பட்டது.

டெல்லியில் சிறுமி பலாத்காரக் கொலையில், பெற்றோரைச் சந்தித்துப் பேசிய புகைப்படத்தை ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். ட்விட்டரின் விதிகளுக்கு முரணாக இருப்பதாகக் கூறி ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, அஜய் மக்கான், ஜிதேந்திர சிங், மாணிக்கம் தாகூர், சுஷ்மதா தேவ் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளும்,காங்கிஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர்களின் ட்விட்டர் கணக்குகள் அனைத்தும் இன்று அன்-லாக் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகையில் “கடந்த ஒரு வாரமாக முடக்கப்பட்டிருந்த ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு இன்று அன்லாக் செய்யப்பட்டது. பல்வேறு மூத்த தலைவர்களின் கணக்கும் ரிலீஸ் செய்யப்பட்டன” எனத் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே ட்விட்டர் நிறுவனத்தின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து ராகுல் காந்தி யுடியூப்பில் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் “என்னுடைய ட்விட்டர் கணக்கை முடக்கியதன் மூலம் ட்விட்டர் நிறுவனம் எங்களின் அரசியல் செயல்பாட்டில் தலையிட்டுள்ளது. ஒரு நிறுவனம் தனது வியாபாரத்தை செய்வதற்காக எங்கள் அரசியலை வரையறுக்கிறது, ஒரு அரசியல் தலைவராக இதை நான் விரும்பவில்லை. இது இந்திய ஜனநாயக கட்டமைப்பின் மீதான தாக்குதலாகவே பார்க்கிறேன்.

இந்தியர்களாகிய நாங்கள் கேள்வி கேட்கிறோம். மத்தியஅரசுக்கு நிறுவனங்கள் கட்டுப்பட்டிருப்பதால், எங்களுக்கான அரசியலை எங்களுக்காக வரையறுக்க நாங்கள் நிறுவனங்களை அனுமதிக்கிறோமா? அப்படியென்றால் என்ன வரப்போகிறதா? அல்லது நமக்கான அரசியலை நாமே வரையறுக்கப் போகிறோமா?

என்னுடைய ட்விட்டர் கணக்கை முடக்கிவிட்டது ராகுல் காந்தி மீதான தாக்குதல் என்று சொல்லிவிட முடியாது, எளிதாக கடந்துவிட முடியாது. எனக்கு ட்விட்டரில் 2 கோடி ஃபாலோவர்ஸ் உள்ளனர், அவர்களின் கருத்துக் கூறும் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் நியாயமற்றது மட்டுமல்ல, ட்விட்டர் நிறுவனம் நடுநிலையானது என்ற கருத்தையும் அந்நிறுவனம் மீறுகிறது” எனக் காட்டமாகத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, ட்விட்டருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உரசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவின் தலைமை நிர்வாகி மணிஷ்மகேஷ்வரி திடீரென மாற்றப்பட்டு, வருவாய் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த திடீர் இடமாற்றம் குறித்து ட்விட்டர் நிறுவனம் சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

SCROLL FOR NEXT