உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை ஜெய் ஸ்ரீராம் கூறவில்லை எனக் கூறி விஸ்வ இந்து பரிஷத்அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் தாமாக முன்வந்து தேசிய சிறுபான்மை ஆணையம் விசாரணைக்கு எடுத்துள்ளது.
கான்பூர் காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பிய தேசிய சிறுபான்மை ஆணையம் ஒருவாரத்துக்குள் விசாரணையை முடித்து அறிக்கையை வழங்க உத்தரவிட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை கான்பூரைச் சேர்ந்த 45 வயதான முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநரை, விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஜெய் ஸ்ரீராம் கூறச் சொல்லி துன்புறுத்தினர். அதற்கு அந்த ஆட்டோ ஓட்டுநர் மறுக்கவே அவரை அடித்து உதைத்து இழுத்துச்சென்றனர், இதைப் பார்த்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் தனது தந்தையை அடிக்காதீர்கள் என கெஞ்சியும் அவர்கள் தாக்கினர். இ்ந்த சம்பவம் நடந்தபோது அதைத் தடுக்காமல் சில காவலர்கள் வேடிக்கை பார்த்தனர்
இந்த காட்சி முழுவதும் வீடியோவாக சிலர் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பிவிட்டனர். ஜெய்ஸ்ரீராம் கூறச் சொல்லி முஸ்லிம் தொழிலாளி தாக்கப்படும் காட்சியும் தடுக்கச் சென்ற மகளின் கண்ணீர்விட்டு அழும் வீடியோவும் வைரலானது. இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து தேசிய சிறுபான்மையினர் நல ஆணையம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானதையடுத்து, கான்பூர் போலீஸார், தொழிலாளியைத் தாக்கிய விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த 6 பேரைக் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் தேசிய சிறுபான்மையினர் நல ஆணையத்தின் துணைத் தலைவர் அத்திப் ரஷீத் நோட்டீஸ் ஊடகங்களிலும், நாளேடுகளிலும், சமூக ஊடகங்களிலும் வெளியான செய்தி,வீடியோவை ஆதாரமாக வைத்து கான்பூர் காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில் “ அந்த வீடியோவில் முஸ்லிம் ஒருவரை ஜெய் ஸ்ரீராம் கூறச் சொல்லி தாக்குவது அந்த சமூகத்தினரின் உணர்வுகளை புண்படுத்துவது போன்று இருக்கிறது. இந்த சம்பவத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, முஸ்லிம் ஆட்டோ ஓட்டுநரை தாக்கியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன, எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள், எந்தெந்தப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது,
எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன , மதநல்லிணக்கத்தைக் காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகியவை குறித்து ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்க வேண்டும். இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததை சில காவலர்கள் வேடிக்கை பார்த்துள்ளனர், கடமையைச் செய்யாத அந்த காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் குறிப்பிட வேண்டும்
இந்த சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநரின் மகள் தனது தந்தையைக் காக்கப் போராடியுள்ளார். இதில் அந்த குழந்தையின் உரிமையும் மீறப்பட்டுள்ளது. அந்த குழந்தை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதை சரி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அறிக்கை அளிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.