கரோனா பெருந்தொற்றின் 2வது அலை இன்னும் முழுமையாக முடியவில்லை. மூன்றாவது அலை வருவதும், வராமல் இருப்பதும் மக்கள் நடவடிக்கையைப் பொறுத்தே அமையும் என டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குக் கூறியதாவது:
கரோனா இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அன்றாடம் 40,000க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதனால், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் தவறாமல் கடைபிடிப்பது மிகவும் அவசியம். அதை நாம் கடைபிடித்தால் மூன்றாவது அலையைத் தடுக்கலாம். மூன்றாவது அலை வந்தாலும் கூட அதன் தாக்கம் ஒப்பீட்டு அளவில் குறைவாகத் தான் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளனர்.
மருத்துவ நிபுணர்கள் ஆகஸ்ட் செப்டம்பர் இடைப்பட்ட காலகட்டத்தில் மூன்றாவது அலை ஏற்படலாம் எனக் கணிக்கின்றனர்.
இந்ந்நிலையில், இந்தியாவின் பிரபல வைராலஜிஸ்டும் மைக்ரோபயாலஜிஸ்டுமான ககன்தீப் காங் கூறுகையில், மூன்றாவது அலை, கரோனா வைரஸின் வேற்றுருவாக்கங்களைப் பொருத்து அமையும். மூன்றாவது அலையில் புதிய வேற்றுருவாக்கங்கள் வந்தால் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடியாது. ஆகஸ்ட், செப்டம்பரில் மூன்றாவது அலை வந்தே தீரும் என்று கூட இப்போதைக்குக் கூற முடியாது. கரோனா வைரஸ் சுற்றுச்சூழல் சார்ந்த செயல்படுகிறது. நாம் இன்னொரு குளிர் காலத்துக்குக் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் அதன் போக்கை நிர்ணயிக்க முடியும் என்று கூறினார்.
இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை கடந்த ஏப்ரல் பாதியில் தொடங்கியது. உச்சபட்சமாக மே மாதத்தில் ஒரே நாளில் 4 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டது. நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை பூதாகரமாக வெடித்தது.
இந்நிலையில், தற்போது இரண்டாவது அலை கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் கூட இன்னும் அது முடியவில்லை என்றே மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஐஐடி கான்பூர், ஹைதராபாத் நிறுவனங்களும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இரண்டாவது அலை ஏற்படலாம் என்று அது அக்டோபரில் உச்சம் தொடலாம் என்றும், மூன்றாவது அலையின் தாக்கமானது புதிய வேற்றுருவாக்கங்களைப் பொறுத்து அமையும் என்றும் கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.