இந்தியா

கட்காரிக்கு எதிரான வாக்குமூலத்தை திரும்பப்பெற கேஜ்ரிவால் மறுப்பு

செய்திப்பிரிவு

கிரிமினல் அவதூறு வழக்கு விவகாரத்தில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு எதிராக தாம் அளித்த வாக்குமூலத்தைத் திரும்பப் பெற டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மறுத்துவிட்டார்.

மேலும் இவ்வழக்கில், கேஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கினையும் டெல்லி நீதிமன்றம் பதிவு செய்தது. அதே நேரம் அவர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தது.

அரவிந்த் கேஜ்ரிவால், கடந்த ஜனவரி 31-ம் தேதி, "இந்தியாவின் மோசமான ஊழல் அரசியல்வாதிகள்" பட்டியலை வெளியிட்டார். இந்தப் பட்டியலில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் நிதின் கட்கரி பெயரும் இடம்பெற்றிருந்தது.

கேஜ்ரிவாலின் அறிவிப்பு அரசியலில் தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாகக் கூறி அவர் மீது நிதின் கட்கரி கிரிமினல் அவதூறு வழக்கு பதிவு செய்தார்.

வழக்கில், ஜாமீன் பெற பிரமாண பத்திரம் அளிக்க மறுத்த கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்ற அறிவுறுத்தலின் படி பிரமாண பத்திரம் அளித்து ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

இந்நிலையில், இன்று டெல்லி பெருநகர நீதிமன்றம் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பேசுகையில்: "நீங்கள் இருவரும் மிகப்பெரிய அரசியல்வாதிகள். நீங்கள் இருவரும் இந்த விவகாரத்தில் ஏன் சுமுக உடன்பாட்டுக்கு வரக்கூடாது? நேரத்தை விரயம் செய்யாமல் ஆக்கப்பூர்வமாக அனுபவிக்கலாமே" என்றார்.

அதற்கு பதிலளித்த நிதின் கட்கரி நான் ஒரு நேர்மையான அரசியல்வாதி. எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் குற்றச்சாட்டுகளை கேஜ்ரிவால் சுமத்தியுள்ளார். எனக்கு கேஜ்ரிவால் மீது தனிப்பட்ட விரோதம் ஏதும் இல்லை. கேஜ்ரிவால் என் மீதான அவதூறு குற்றச்சாட்டை திரும்பப்பெற்றால் நான் சுமுகத் தீர்வு காண தயார் என கூறியுள்ளார்.

அப்போது குறுக்கிட்ட கேஜ்ரிவால், கட்காரி மீதான குற்றச்சாட்டுகளுக்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது. எனவே அவற்றை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என கூறினார்.

SCROLL FOR NEXT