இந்தியாவில் குழந்தைகள், இளைஞர்கள் என 15 கோடிக்கும் அதிகமானோர் அடிப்படைக் கல்வி முறையிலிருந்து ஒதுங்கியுள்ளனர், மக்கள் தொகையில் 25 கோடி பேர் அடிப்படை கல்விக்கும் கீழாக உள்ளனர் என மத்திய கல்வியமைச்சர் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தொழில்முனைவோர் என்ற தலைமையில் கருத்தரங்கு இன்று டெல்லியில் நடந்தது. இதில் மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
குழந்தைகள் மற்றும் இளைஞர்களில் 3 வயது முதல் 22 வயதுள்ளவர்களில் அரசாங்கத்தில் பதிவு செய்தோர், தனியார் துறையில் பதிவு செய்தோர், தொண்டு நிறுவனப் பள்ளிகளில் பதிவு செய்தோர், அங்கன்வாடி, உயர்கல்வி நிறுவனங்களில் பதிவு செய்தோர் என ஒட்டுமொத்த திறன்கள் அடிப்படையில் 35 கோடிபேர் உள்ளனர். ஆனால், இந்த 3 வயது முதல் 22 வயதுள்ளவர்கள் நாட்டில் 50 கோடி பேர் உள்ளனர்.
அப்படியென்றால், ஏறக்குறைய 15 கோடி குழந்தைகள், இளைஞர்கள் அடிப்படை கல்வியற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களை கல்வி முறைக்குள் கொண்டுவருவது அவசியமாகும்.
இந்த தேசம் சுதந்திரம் பெற்றபோது நாட்டில் கல்வியறிவு பெற்றோர் 19 சதவீதம மட்டுமே இருந்தார்கள். ஆனால், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நெருங்கிவிட்டோம், இப்போது கல்வியறிவு பெற்றோர் 80 சதவீதத்தை எட்டிவிட்டனர். 20 சதவீதம் பேர் கல்வியற்றவர்களாக அதாவது, மக்கள் தொகையில் 20 சதவீதம் என்பது 25 கோடிபேர் கல்வியறிவு இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை என்பது, சாதாரண ஆவணம் அல்ல. அடுத்த 25 ஆண்டுகளுக்கான செயல்திட்டம். சில இலக்குகளை நாம் நாட்டின் 100-வது சுதந்திரதினத்துக்குள் அடைய வேண்டும்.
இவ்வாறு தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.