இந்தியா

மத்திய அரசைக் கண்டித்து ம.பி. முதல்வர் உண்ணாவிரதம்: விவசாயிகளின் வேதனையில் பாராமுகம் என புகார்

செய்திப்பிரிவு

போபால் மாநில விவசாயிகளின் துயர் துடைக்க உரிய நடவடிக்கை எடுக்க முன்வராமல் மத்திய அரசு அலட்சியப் போக்குடன் இருப்பதாக புகார் கூறி மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் போபாலில் வியாழக்கிழமை உண்ணாவிரதம் இருந்தார். அந்த போராட்டத்தில் மாநில அமைச் சர்களும் பங்கேற்றனர்.

பருவம் தவறி பெய்த பலத்த மழையால் மாநில விவசாயிகள் பெருத்த அளவில் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்ற னர். ஆனால், அவர்களின் வேதனைகளை களைய முன்வரா மல் பாராமுகம் காட்டுவதாகவும் அதை கண்டித்தும் பிற்பகல் 2 மணி வரை மாநிலம் தழுவிய பந்த் போராட்டம் நடத்தப்படும் என பாஜக அறிவித்திருந்ததன் ஒரு பகுதியாக இந்த 4 மணி நேர உண்ணாவிரதம் நடத்தப்பட்டது.

உண்ணாவிரத மேடையில் சிவ்ராஜ்சிங் சௌகான் பேசியதாவது:

மாநிலத்தில் பருவம் தவறி பெய்த மழையால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு சிறப்பு நிவாரண உதவியாக ரூ. 5000 கோடி வழங்க வேண்டும். மாநிலத்தின் தற்போதைய துயரகர நிலைமையை மத்திய அரசிடம் எடுத்துக் கூறுவதற்காக மாநில அமைச்சரவையில் உள்ள அனைவரும் டெல்லி செல்ல உள்ளோம்.

மாநில அரசு சார்பில் ரூ. 2000 கோடி நிவாரணம் வழங்க திட்டமிட்டு அதை விநியோகிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குறைகளைத் தீர்க்க சாத்தியமான எல்லா உதவிகளையும் வழங்க மாநில அரசு தயாராக இருக் கிறது.

போபால் புதிய சந்தை அருகே உள்ள மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது விவசாயிகளுக்கு உதவிடும் நோக்கில் நிதி வசூல் செய்ததில் ரூ. 7.42 கோடி திரண்டது.

மத்திய அரசு புறக்கணித்தாலும் நெருக்கடியில் தவிக்கும் விவசாயி களை மாநில அரசு கைவிடாது. விவசாயிகளின் துயர் துடைக்க முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு பொது மக்கள் தாராளமாக பங்களிப்பு தரவேண்டும்.

இயற்கை பேரிடர்களை சமாளிப்பதற்காக நிரந்தர தேசிய பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். பருவம் தவறி பெய்த மழையால் பாதிப்புக்குள்ளான கிராமங்களை பார்வையிடச் சென்றால் அதை சுற்றுலா என கேலி செய்கிறது மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ். விவசாயிகள்படும் துயர் காங்கிரஸ் தலைவர்களின் கண்ணுக்குத் தெரியவில்லை.

சாகுபடி செய்த பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டால் அதற்கு உரிய இழப்பீடு கிடைக்கும் வகையில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு திருத்தி அமைக்க வேண்டும் என்றார் சௌகான்.

SCROLL FOR NEXT