கரோனா சிகிச்சையின் போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் அதுகுறித்து தெரிவிக்க ஆகஸ்ட் 13 வரை அவகாசம் இருப்பதாக டெல்லி அரசுக்கு மத்திய சுகாதார அமைச்சர் மண்சுக் மாண்ட்வியா தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று, டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை இயக்குநர் லாவ் அகர்வால், "மாநில அரசுகளிடம் கரோனா இரண்டாவது அலையின் போது அவர்கள் மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏதேனும் மரணம் நிகழ்ந்ததா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
ஆனால் இதுவரை ஒரே ஒரு மாநிலம் மட்டும் தங்களின் மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் நேர்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்கள் ஏதும் தெரிவிக்கவில்லை" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டெல்லி மாநில துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணம் தொடர்பாக எவ்வித விசாரணைக் கடிதமும் மத்திய அரசிடம் இருந்து தங்களுக்கு வரவில்லை என்று கூறியிருந்தார்.
இதனை சுட்டிக்காட்டியுள்ள மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, "இதோ கடந்த ஜூலை 26 ஆம் தேதி டெல்லி அரசுக்கு சுகாதார அமைச்சகம் அனுப்பிய மெயிலின் பிரதி. ஆகஸ்ட் 13 நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடையும் நாள் வரை இது குறித்து பதிலளிக்க உங்களுக்கு அவகாசம் இருக்கிறது. உங்களின் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து விரைவில் தகவல் அனுப்புங்கள்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏதேனும் மரணம் நிகழ்ந்துள்ளதா? அப்படி நடண்டிருந்தால் அதுபற்றி ஏதேனும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளாதா? இக்கட்டான இரண்டாம் அலையின் போது முக்கிய மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் பதுக்கலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.
கரோனா இரண்டாவது அலையின் போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் ஏற்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் குவிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.