இந்தியா

பிஹாரில் நரபலி பூஜைக்காக சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது

செய்திப்பிரிவு

பிஹாரில் நரபலி பூஜைக்காக சிறுமியை கொலை செய்ததாக 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பிஹார் மாநிலம் முங்கேர் மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஒருவரை கடந்த 4-ம் தேதி காணவில்லை. மறுநாள் அச்சிறுமியின் சடலம், வலது கண் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில் கங்கை கரையில் கிடந்தது. அச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் 12 பேரைபிடித்து போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் நரபலிபூஜைக்காக சிறுமியைக் கொன்றதாக அதே கிராமத்தைச் சேர்ந்த 4 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் திலீப் குமார் சவுத்ரி என்பவர் முக்கிய குற்றவாளி ஆவார். அவரது மனைவி கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், மனைவிக்கு கருச்சிதைவு ஏற்படாமல் இருக்க ககரியா மாவட்டத்தைச் சேர்ந்த ஆலம் என்ற மந்திரவாதியை திலீப்குமார் அணுகியுள்ளார். அப்போது 10-வயது சிறுவன் அல்லது சிறுமியின் ரத்தம் மற்றும் கண்களால் புனிதப்படுத்தப்பட்ட தாயத்தை கர்ப்பிணிக்கு அணிவிக்க வேண்டும் என ஆலம் கூறியுள்ளார்.

இதையடுத்து, கடந்த 4-ம் தேதி அச்சிறுமி வீடு திரும்பும் வழியில் அவரை திலீப் குமார் உள்ளிட்ட 3 பேர் அருகில் உள்ள செங்கல் சூளைக்கு இழுத்துச் சென்றுஅடித்துள்ளனர். பிறகு கழுத்தை நெறித்து கொன்று வலது கண்ணை எடுத்துள்ளனர். சடலத்தை ஆற்றங்கரையில் வீசியுள்ளனர்.

இது தொடர்பாக திலீப் குமார், மந்திரவாதி ஆலம், அவர்களுக்கு உதவிய தன்வீர், தஷ்ரத் ஆகிய நால்வரையும் கைது செய்த போலீஸார், நால்வர் மீதும் கடத்தல் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நால்வருடன் முங்கேர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திலீப் குமார் சவுத்ரி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மேற்கண்ட விவரத்தை தெரிவித்தார்.

பாலியல் புகார் நிராகரிப்பு

அவர் மேலும் கூறும்போது, "சிறுமியின் உடலில் காயங்கள்இருந்ததால் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. ஆனால்பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இது நிராகரிக்கப்பட்டுள்ளது. தடயவியல் பரிசோதனையிலும் இது உறுதி செய்யப்படவில்லை” என்றார்.

திலீப் குமாருக்கு ஏற்கெனவே 2 ஆண், 2 பெண் என 4 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் 5-வதுகுழந்தைக்காக இந்தக் கொலையை செய்ததாக ஒப்புதல் தெரிவித்து செய்தியாளர்களை அதிர்ச்சி அடைய வைத்தார்.

ஆனால் சிறுமியின் பெற்றோர் இதனை ஏற்க மறுக்கின்றனர். தங்கள் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

SCROLL FOR NEXT