இந்தியா

ஜாட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு ஒருவர் பலி; ஹரியாணாவில் ராணுவம் அழைப்பு

பிடிஐ

ஹரியாணா மாநிலம் ரோட்டக் பகுதியில் ஜாட் இனத்தவர் நடத்திய போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். 22 பேர் காயமடைந்தனர்.

இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் தங்களையும் சேர்க்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என ஹரியாணா மாநில ஜாட் சமுதாய தலைவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துப் போராட்டத்தில் குதித்தனர்.

ரோட்டக்கில் நடந்த ஜாட் பிரிவினர் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை திடீரென வன்முறை வெடித்தது. அப்போது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். மேலும் 21 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் ஆர்பாட்டக்காரர்களின் துப்பாக்கித் தோட்டா பாய்ந்து துணை ராணுவப்படை வீரர் ஒருவரும் அடங்குவார். நிலைமைகளை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் அழைக்கப்பட்டுள்ளதாக ஹரியாணா டிஜிபி தெரிவித்தார்.

டெல்லி-ஹிசார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரோஹ்டக் பைபாஸ் சாலையில் ஜாட் போராட்டக்காரர்கள் ஒன்று சேர்ந்தனர். இவர்கள் அங்கிருந்த போலீஸ் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் ஹரியாணா நிதியமைச்சர் அபிமன்யு வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அவரது இல்லத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் கொளுத்தப்பட்டது. வீட்டின் மீது கற்களால் தாக்கிய கும்பல், வீட்டையும் கொளுத்த முயற்சி செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலைமைகளில் கட்டுக்கடங்காமல் வன்முறை சென்று விடலாம் என்ற ஐயத்தில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அடையாளம் தெரியாத ஒரு நபர் தோட்டா பாய்ந்து பலியானார், மேலும் 21 பேர் காயமடைந்தனர்.

ஹரியாணா மாநிலத்தில் கணிசமான அளவில் ஜாட் பிரிவு மக்கள் வசித்து வருகின்றனர். பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கி இருப்பதால், தங்களையும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து, இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கடந்த சில நாட்களாக அந்த பிரிவு தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜாட் பிரிவு மக்கள் அதிகம் வசிக்கும் ரோதக், ஜிந்த், பிவானி, சோனேபட் மற்றும் ஹிஸார் ஆகிய பகுதிகளில் வன்முறை பரவுவதை தடுக்க இணையதளம், தொலைபேசி உள்ளிட்ட தொலைதொடர்பு சேவைகளை மாநில அரசு துண்டித்துள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போராட்டம் காரணமாக ரயில் மற்றும் சாலை போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது. இதனால் பால், காய்கறிகள், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் சமையல் காஸ் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் ஜாட் பிரிவு சமூகத்தை இதர பிறப்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என ஜாட் தலைவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அகில இந்திய ஜாட் சங்கத்தின் தேசிய தலைவர் யஷாபால் மாலிக் கூறும்போது, ‘‘எங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்றும் வரை போராட்டத்தை வாபஸ் பெறமாட்டோம். பஞ்ச்குலா மற்றும் யமுனா நகர் போன்ற மாநிலத்தின் பிற பகுதிகளிலும் போராட்டத்தை தீவிரப்படுத்த எண்ணியுள்ளோம்.

வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில், மாநில அரசு ஜாட் மக்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இதற்கான சட்டத்தை சட்டப்பேரவையில் பாஜக அரசு நிறைவேற்ற வேண்டும். காங்கிரஸ், பாஜக போன்ற அரசியல் கட்சிகள் கூட எங்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்டன. ஆனால் ஹரியாணா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் மட்டும் வீணாக பிடிவாதம் பிடித்து வருகிறார். இது தான் பிரச்சினைக்கு காரணம்’’ என்றார்.

SCROLL FOR NEXT