தேர்தலின்போது வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டபின், 48 மணி நேரத்துக்குள் ஏன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்ற விவரத்தையும், அவர்கள் மீதான குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களையும், அவர்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சிகள் கண்டிப்பாக நாளேடுகள், தொலைக்காட்சிகளில் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2018-ம் ஆண்டு பாஜக தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா தாக்கல் செய்த மனுவில், அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குற்றப் பின்னணி, வழக்கு விவரங்களை மக்களுக்குத் தெரியும் வகையில், நாளேடுகள், மின்னணு ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹின்டன் நாரிமன், ரவிந்திரபாட் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. அதில், “வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு 48 மணி நேரம் முதல் 2 வாரத்துக்குள் அந்த வேட்பாளரை ஏன் தேர்வு செய்தோம் என்றும், அவர் மீதான நிலுவையில் இருக்கும் குற்ற வழக்குகள் குறித்தும் நாளேடுகள், சேனல்கள், சமூக ஊடகங்களில் அரசியல் கட்சிகள் விளம்பரப்படுத்த வேண்டும்.
அந்தந்தக் கட்சிகள் தங்களின் இணையதளத்திலும் வேட்பாளர்கள் விவரம், குற்றப் பின்னணி, குற்றப்பத்திரிகை ஏதும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா, தேர்வு செய்யப்பட்ட காரணம், கிரிமினல் குற்றச்சாட்டு இல்லாத பிற வேட்பாளர்கள் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்ற காரணங்களைத் தெளிவுபடுத்த வேண்டும்’’ என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் அந்தத் தீர்ப்பை மதிக்காமல் சில கட்சிகள் செயல்பட்டுள்ளதால் அவற்றின் மீது அவமதிப்பு வழக்கு தொடரக் கோரி வழக்கறிஞர் பிரிஜேஷ் மிஸ்ரா மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்தத் தீர்ப்பை மதிக்காமல் செயல்படும் அரசியல் கட்சிகளை எவ்வாறு தண்டிப்பது என்பது குறித்து நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன், தேர்தல் ஆணையம் பரிந்துரைகளை அளித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் விசாரிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹின்டன் நாரிமன், ரவிந்திரபாட் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று பிறப்பித்த உத்தரவில், “2020ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி அளித்த தீர்ப்பில் சிறிய திருத்தம் செய்துள்ளோம். அதன்படி, வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட 48 மணி நேரத்துக்குள் அவர் என்ன காரணத்துக்காகத் தேர்வு செய்யப்பட்டார், அவர் மீதான குற்ற வழக்குகள், பின்னணி ஆகியவற்றை அவர் சார்ந்திருக்கும் அரசியல் கட்சிகள் தெளிவுபடுத்தி, விளம்பரம் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.
இதற்கிடையே, 2020ஆம் ஆண்டு தீர்ப்பை மதிக்காமல் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் செயல்பட்டதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகியவை சார்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் கூறுகையில், “என்சிபி கட்சி சார்பில் 26 வேட்பாளர்கள் குற்றப்பின்னணி உள்ளவர்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 4 வேட்பாளர்கள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி சார்பில் 103 வேட்பாளர்கள், ஐக்கிய ஜனதா தளம்கட்சி சார்பில் 56 வேட்பாளர்கள் குற்றப்பின்னணி உள்ளவர்கள்” எனத் தெரிவித்தார்.