எங்கள் முன்னோர்கள் காஷ்மீரில் வாழ்ந்தவர்கள், எனக்குள்ளும் அது உள்ளது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினார்.
ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர் குலாம் அகமதுவின் மகள் திருமணம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு ராகுல் முதல்முறையாக வந்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் கந்தர்பல் மாவட்டத்தின் துல்முல்லாவில் உள்ள கீர்பவானி துர்கா கோவிலில் இன்று அவர் வழிபாடு நடத்தினார். அவருடன் கட்சி நிர்வாகிகளும் வந்திருந்தனர். பின்னர் ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ரத்பல் தர்காவிலும் அவர் பிரார்த்தனை செய்தார்.
பின்னர் ஸ்ரீநகரில் நடந்த தொண்டர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
டெல்லிக்கு புலம் பெயரும் முன்பு எங்கள் குடும்பம் அலகாபாத்தில் வாழ்ந்தது. அதற்கு முன்பு எங்கள் முன்னோர்கள் காஷ்மீரில் வாழ்ந்தனர். அதனால் காஷ்மீருக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு
ஜம்மு காஷ்மீர் மக்களின் அன்பையும், உறவையும் விரும்புகிறேன்.
எங்கள் குடும்பம் காஷ்மீரின் ஜீலம் தண்ணீரை குடித்து வளர்ந்தது. உங்கள் பழக்க வழக்கங்கள், உங்கள் சிந்தனை, உங்கள் செயல்பாடு ‘காஷ்மீரீகள்’ என பெருமையுடன் வெளிப்படுத்துகின்றன. அது என்னுள்ளும் உள்ளது.
காஷ்மீர் மக்கள் வலியையும் துன்பத்தையும் எதிர்கொண்டு வருகின்றனர். இந்த மக்கள் மீது மத்திய பாஜக அரசு அடக்குமுறையை ஏவி விடுகிறது. ஆர்எஸ்எஸின் பொய் பிரச்சாரத்தால் இந்த மக்களுக்கு எதிரான தாக்குல் நடக்கிறது. இதனை எதிர்த்து ஜனநாயக சக்திகள் தொடர்ந்து போராட வேண்டும்.
ஜம்மு - காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். இது தான் எங்கள் கோரிக்கை. காஷ்மீரில் நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதற்காக காங்கிரஸ் தொடர்ந்து போராடும்.
இவ்வாறு அவர் கூறினார்.