கோப்புப்படம் 
இந்தியா

பெகாசஸ் விவகாரம்: நாடாளுமன்றத்தில் முதல்முறையாக மத்திய பாதுகாப்புத்துறை பதில்

ஏஎன்ஐ


தேசிய அரசியலை உலுக்கிவரும் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் மவுனம் காத்துவந்த மத்திய அரசு மாநிலங்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு விளக்கம் அளித்துள்ளது.

பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் முதல்முறையாக மத்திய அரசு மவுனம் கலைத்து அதிகாரபூர்வமாக அவையில் பதில் அளித்துள்ளது.

இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த விவகாரத்தை கடந்த 3 வாரங்களாக நாடாளுமன்றத்தில் எழுப்பி வரும் எதிர்க்கட்சிகள் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், எந்தவிதமான ஒட்டுக்கேட்பும் நடக்கவில்லை, யாருடைய செல்போனும் கண்காணிக்கப்படவில்லை என்று மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்நிலையில் பெகாசஸ் விவகாரத்தில் மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய பாதுகாப்புத்துறை இணைமைச்சர் அஜெய் பாட் நேற்று பதில் அளித்தார். இஸ்ரேலின் என்எஸ்ஓ குழுமத்துடன் மத்திய அரசுக்கு ஏதேனும் தொடர்புகள், பரிவர்த்தனைகள் இருக்கிறதா என்று கேள்வி் எழுப்பப்பட்டது.

இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை இணைஅமைச்சர் அஜெய் பாட் நேற்று மாநிலங்களவையில் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

இஸ்ரேலின் என்எஸ்ஓ தொழில்நுட்பக் குழுமத்துடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு எந்தவிதமான தொடர்பும், பரிவர்த்தனையும் இல்லை.

கடந்த 3 ஆண்டுகளில் பாதுகாப்புத் தேவைக்காக வெளிநாடுகளில் இருந்து தளவாடங்கள் கொள்முதல் செய்வது அதிகரித்துள்ளது. கடந்த 2018-19ல் ரூ.45,707 கோடி, 2019-20்ம் ஆண்டில் ரூ.47,961 கோடி, 2021-21ம் ஆண்டில் ரூ.53,118 கோடி ” எனத் தெரிவித்தார்.

பாதுகாப்புத்துறை இணைஅமைச்சர் அஜெய் பாட்

பெகாகஸ் விவகாரம் தொடர்பாக தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கடந்த இரு வாரங்களுக்கு முன் அவையில் விளக்கம் அளிக்கையில், “ இந்தியர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்டதாக வெளியானத் தகவலில் உண்மையில்லை. மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்பாக பரபரப்புக்காக இந்த தகவல் வெளியாகியுள்ளது.

பல்வேறுவிதமான கண்காணிப்புகள் இருப்பதால் இந்தியாவில் சட்டவிரோதமான, அதிகாரபூர்வமற்ற வகையில் இந்தியர்களின் செல்போனை கண்காணிப்பது என்பது சாத்தியமில்லை. இந்திய ஜனநாயகத்தையும், ஜனநாயக அமைப்புகளையும் அவமானப்படுத்த இந்த விவகாரம் கிளப்பிவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT