பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

வருகிறது ஜைடஸ் கெடிலா தடுப்பு மருந்து; ஊசியில்லாதது; 3 டோஸ்: விரைவில் அனுமதி

ஏஎன்ஐ

3 டோஸ்களைக் கொண்ட அகமதாபாத்தின் ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி கரோனா தடுப்பு மருந்தை அவசரப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு இந்த வாரத்தில் அனுமதியளிக்கும் எனத் தெரிகிறது.

இதுவரை இந்தியாவில் 5 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசரப் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, கோவாக்சின், கோவிஷீல்ட், ஸ்புட்னிக், மாடர்னா, ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. ஜைடஸ் கெடிலாவுக்கு அனுமதி கிடைக்கும்பட்சத்தில் இந்தியாவில் 6-வது தடுப்பு மருந்து மக்களின் பயன்பாட்டுக்கு வரும். அதுமட்டுமல்லாமல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 2-வது தடுப்பு மருந்து என்ற பெருமையும், முதல் டிஎன்ஏ வகை தடுப்பூசி என்ற பெருமையும் கெடிலா நிறுவனத்துக்குக் கிடைக்கும்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த வாரம் மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசுகையில், “இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை அக்டோபர், நவம்பர் மாதத்தில் எதிர்பார்க்கலாம். இந்த நிறுவனங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தியைத் தொடங்கும்போது தடுப்பூசி பற்றாக்குறை குறையும்.

பயோலாஜிக்கல் இ மற்றும் நோவார்டிஸ் தடுப்பூசியும் விரைவில் சந்தையில் கிடைக்கும். ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் தடுப்பு மருந்துக்கும் அவசர காலப் பயன்பாட்டுக்கு விரைவில் வல்லுநர்கள் குழு அனுமதியளிக்கும்” எனத் தெரிவித்தார்.

டிஎன்ஏ வகை தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ள ஜைடஸ் கெடிலா நிறுவனம், 3-கட்ட கிளினிக்கல் பரிசோதனையை முடித்து அவசரகாலப் பயன்பாட்டுக்கு அனுமதி கோரி கடந்த மாதம் டிஜிசிஐ அமைப்பிடம் அனுமதி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

3 டோஸ் தடுப்பூசி

ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி தடுப்பூசி 3 டோஸ்களைக் கொண்டது. முதல் டோஸ் எடுத்துக்கொண்டபின் 28-வது நாளில் 2-வது டோஸும், 56-வது நாளில் 3-வது டோஸ் செலுத்த வேண்டும். நீடில்லெஸ் தொழில்நுட்பத்தில் இந்தத் தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளது.

ஊசியில்லாத் தடுப்பு மருந்து

அதாவது, ஊசி மூலம் தடுப்பு மருந்து செலுத்தப்படாமல், தோல் பகுதியில் ஹைப்போடெர்மிக் நீடில் (hypodermic needle) மூலம் அதிர்வலைகள், வாயுக்களின் அழுத்தம், மின்முனை மூலம் செலுத்தப்படும்.

இந்தத் தடுப்பு மருந்து, மத்திய அரசின் உயிர் தொழில்நுட்பத் துறையின் கீழ்வரும். உயிர் தொழில்நுட்பம் தொழில் ஆராய்ச்சி உதவிக் குழுவின் உதவியுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பு மருந்தை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை பாதுகாத்து நீண்ட காலத்துக்குப் பயன்படுத்த முடியும், 25 டிகிரி செல்சியஸ்வரை வைத்து, குறுகிய பயன்பாட்டுக்குப் பயன்படுத்தலாம்.

50 மையங்கள்

ஜைடஸ் கெடிலா நிறுவனம் 3 டோஸ் தடுப்பூசிகளைக் கொண்டது. ஆண்டுக்கு 10 முதல் 12 கோடி டோஸ்களைத் தயாரிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம்தான் அதிகபட்சமாக 50 மையங்களில் கிளினிக்கல் பரிசோதனையை நடத்தி முடித்துள்ளது.

12 வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்குத் தடுப்பூசியைத் தயாரித்திருந்தாலும், முதலில் பதின்வயதினருக்குப் பயன்படுத்தவே இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கும் எனத் தெரிகிறது.

கரோனா வைரஸுக்குத் தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் பிளாஸ்மிட் டிஎன்ஏ தடுப்பூசி என்பது ஜைடஸ் கெடிலா நிறுவனத்துடையது மட்டும்தான். கரோனாவுக்கு எதிராக இந்தத் தடுப்பூசி மனிதர்களுக்கு அதிக பாதுகாப்பும், திறன்மிக்கதாகச் செயல்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT