முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அவமதிக்காமல், மேஜர் தயான் சந்தை கவுரப்படுத்தியிருக்கலாம். மத்தியில் ஆளும் பாஜக அரசின் அரசியல் விளையாட்டு, பழிவாங்கும், அவமானப்படுத்தும் அரசியல் என்று சிவசேனா கட்சி காட்டமாக விமர்சித்துள்ளது.
விளையாட்டுத் துறையில் சிறப்பான சாதனை புரிந்தவர்களுக்காக ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது கடந்த 1992-ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. அந்த விருதின் பெயரை மாற்றி தயான்சந்த் கேல்ரத்னா விருது என்று கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி அறிவித்தார். நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தின் அடிப்படையில்தான் இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடேனா சாம்னாவில், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கான பெயர் மாற்றம் செய்யப்பட்டதைக் கடுமையாக விமர்சித்துள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
''முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தியாகங்களை அவமதிக்காமல் மேஜர் தயான் சந்த் கவுரவிக்கப்பட்டிருக்கலாம். இந்துஸ்தானம் அதனுடைய கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் இழந்துவிட்டது. தயான் சந்த் இருந்திருந்தாலும் இப்படித்தான் உணர்ந்திருப்பார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் பதக்கம் வென்ற தருணத்தை இந்த தேசம் கொண்டாடி வந்த நேரத்தில், மத்திய அரசோ அரசியல் விளையாட்டு விளையாடுகிறது. இதனால் ஏராளமானோரின் இதயங்கள் காயப்படுத்தப்பட்டன.
ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது இதற்கு முன் பல வீரர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், விருது பெற்ற ஒரு வீரர், வீராங்கனை கூட, ராஜீவ்காந்தி பெயரில் விருது வழங்கக் கூடாது, அதை விரும்பவில்லை என்று கூறவில்லையே.
மக்களின் விருப்பத்துக்கு ஏற்பவே விருதின் பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்ததுள்ளது. இதுபோன்ற எந்தவிதமான ஆதாரமற்ற விவாதங்களைக் கூறக் கூடாது. காங்கிரஸ் கட்சிகூட தனது ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற கருத்தைத்தான் கூறியது.
நாட்டின் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்படும் உயரிய ராஜீவ் கேல் ரத்னா விருது இனிமேல், மேஜர் தயான் சந்த் பெயரில் வழங்கப்படும். அதுதான் அவருக்குச் செய்யும் உண்மையான மரியாதை என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
விளையாட்டுடன் தொடர்புடைய ஒவ்வொருவரும் கண்டிப்பாக இதைப் பற்றிப் பெருமைப்பட வேண்டும். அமித் ஷாவின் வார்த்தைகள் 100 சதவீதம் சரியானது. அவர் சொன்னதையும்,செய்ததையும் நேரடியாக விவாதிப்பது அர்த்தமற்றது. ஏனென்றால், கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு, ஜவஹர்லால் நேரு, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால், சந்திரசேகர் ஆகியோர் செய்ததை அழித்துவிட்டதுதானே.
பழிவாங்கும் உணர்ச்சி, அவமானப்படுத்துதல் நோக்கத்தோடு ஒரு அரசு செயல்பட முடியாது. அதே நேரத்தில் மக்களின் உணர்வுகள், எண்ணங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேஜர் தயான் சந்த் சாதனைகளைக் கடந்த கால அரசுகள் மறந்துவிட்டன. அதற்காக ராஜீவ் காந்தியின் பெயரை அழித்துவிட்டு, அவரின் திாயகங்களை மறந்துவிட்டு, அந்த விருதுக்கு தயான் சந்த் பெயரை வைப்பது அவருக்குச் செய்யும் உண்மையான மரியாதையாகக் கருத முடியாது. இது வெறுப்பு அரசியல்.
பாஜகவில் உள்ள சிலர் ஹாக்கி விளையாட்டுக்கு ராஜீவ் காந்தி என்ன செய்தார், ஹாக்கி மட்டையைக் கையில் எடுத்தாரா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
அவர்கள் கேள்வி நியாயமானதுதான். ஆனால், அகமதாபாத்தில் சர்தார் படேல் மைதானத்தின் பெயரை நரேந்திர மோடி என்று பெயர்மாற்றம் செய்துள்ளீர்கள். கிரிக்கெட்டில் பிரதமர் மோடி ஏதேனும் சாதித்தாரா, அல்லது அருண் ஜேட்லி என்ன சாதித்தார் என டெல்லி அரங்கிற்கு பெயர் வைத்தீர்கள்.
அங்கு என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறைதான் இதற்கும் பொருந்தும். இதுபோன்ற கேள்விகளை சிலர் கேட்கிறார்கள். ஆனால், இன்று கிரிக்கெட், கால்பந்து நிர்வாகம் போன்றவை அந்த விளையாட்டுக்குத் தொடர்பில்லாதவர்கள் கைகளில்தான் இருக்கிறது. இது எந்தவிதமான சமிக்ஞையாகக் கருதவேண்டும்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதைக் கொண்டாடுகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இதே அரசுதான் ஒலிம்பிக்கிற்கு வீரர்கள் தயாராவதற்கான பட்ஜெட்டில் ரூ.300 கோடிவரை குறைத்தது.
இந்திரா காந்தி தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார், ராஜீவ் காந்தியும் தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இருவருக்கும் இடையே பல்வேறு கருத்துகள் இருக்கலாம். ஜனநாயகத்தில் வேறுபாட்டுக்கான வெற்றிடம் இருக்க வேண்டும். ஆனால், பிரதமர்களின் தியாகங்கள், நாட்டின் வளர்ச்சிக்காக அவர்கள் செய்த பங்களிப்புகளைக் கேலிக்குள்ளாக்க முடியாது''.
இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது