ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் (யுஎன்எஸ்சி) கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகிக்கிறார். இந்த கூட்டத்துக்கு தலைமை ஏற்கும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளுக்காக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 15 உறுப்பினர் கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களான 5 நாடுகளை தவிர்த்து இந்தியா உள்பட 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக உள்ளன.
இந்த கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒவ்வொன்றும் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதமும் கவுன்சிலுக்கு தலைமை தாங்கும். அந்த வகையில் இந்தியா இந்த மாதம் பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது.
ஆங்கில எழுத்துக்களின் வரிசைப்படி, பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக, மாதம் ஒரு நாடு இருக்கும். அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான தலைவராக தற்போது இந்தியா பொறுப்பேற்றுள்ளது.
அதன்படி இன்று நடைபெறும் கூட்டத்தக்கு பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார். கடலோர பாதுகாப்பு, அமைதி நடவடிக்கை மற்றும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பிரதமர் மோடியின் உரை அமைந்து இருக்கும். சர்வதேச அமைதியை வலுப்படுத்துவதற்கு பங்களிப்பு அளிக்கும் வகையில், தலைமை பதவியில் செயல்படப் போவதாக இந்தியா தரப்பில் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்கு தலைமை வகிக்கப் போகும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெறுகிறார்.
இதைத் தொடர்ந்து நடைபெறவுள்ள பல்வேறு உயர்நிலைக் கூட்டங்களில் பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ் ஷிருங்லா உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர். இந்த அனைத்துக் கூட்டங்களும் காணொலி முறையில் நடைபெறுகிறது.