இந்தியா

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா புகாரை அடுத்து நீதிபதிகள் பற்றி அவதூறு கருத்து வெளியிட்ட 5 பேர் கைது: சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை

செய்திப்பிரிவு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் விமர்சனத்தை அடுத்து, ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதிகளைப் பற்றி அவதூறாக கருத்து வெளியிட்டது தொடர்பாக 5 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் (49), கடந்த மாதம் 28-ம் தேதிஆட்டோ ஏற்றி கொலை செய்யப்பட்டார். முதலில் அதை விபத்து என்று போலீஸார் வழக்குப் பதிவுசெய்தனர். ஆனால், ஆட்டோ மோதும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

அதன்பிறகு தலைமை நீதிபதி ரமணா கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூறும்போது, ‘‘நீதிபதிகள் தங்கள் பாதுகாப்பு குறித்து அளிக்கும் புகார்கள் மீது சிபிஐ, ஐ.பி. போன்ற புலனாய்வு அமைப்புகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை’’ என்று கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதிகள் பற்றி அவதூறான கருத்துகள் பரப்பியது குறித்து விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்அடிப்படையில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து 3 பேரை கைது செய்தது. இந்நிலையில், தலைமைநீதிபதி ரமணாவின் விமர்சனத்துக்குப் பிறகு, மேலும் 2 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் சமீபத்தில்தான் குவைத்தில் இருந்து நாடு திரும்பி உள்ளார்.

நீதிபதி உத்தம் ஆனந்த் கொலை தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் லகான் வர்மா, அவ ரோடு ஆட்டோவில் இருந்த ராகுல் வர்மா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவீன கருவிகளில் பதிவு

இந்த வழக்கை விசாரித்து வரும்சிபிஐ அதிகாரிகள், நீதிபதி மீது ஆட்டோ மோதிய இடத்தில் நேற்று அதேபோன்ற சூழ்நிலையை சிபிஐ அதிகாரிகள் உருவாக்கினர். லகான் வர்மா வேகமாக ஆட்டோ ஓட்டினார். அவர் எவ்வளவுவேகத்தில் ஆட்டோ ஓட்டினார் என்பதை நவீன கருவிகள் மூலம் நிபுணர்கள் பதிவு செய்தனர். இந்த விசாரணை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.

ஜார்க்கண்ட் மாநில போலீஸார் வழக்கு விசாரணையை முறையாக நடத்தவில்லை என்று குற்றம் சாட்டப்படும் நிலையில், சிபிஐ விசாரணையில் உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

காவல் நிலைய சித்ரவதைகள்: தலைமை நீதிபதி வேதனை

புதுடெல்லி: தேசிய சட்ட சேவைகள் ஆணையம் சார்பில் டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா பேசியதாவது:

காவல் நிலையத்தில் மனித உரிமைக்கான அச்சுறுத்தல்கள் மற்றும் உடல் ரீதியான சித்ரவதைகள் அதிகமாக உள்ளது. காவல் நிலையங்களில் சித்ரவதை மற்றும் போலீஸாரின் கொடுமைகள் இன்னும் நம் சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளாக உள்ளன. இவை அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. மனித உரிமைகள் தொடர்பாக அரசியல் சட்டத்தில் பிரகடனங்கள் மற்றும் உத்தரவாதங்கள் இருந்தபோதிலும், காவல் நிலையங்களில் உறுதியான சட்ட பிரதிநிதித்துவம் இல்லாதது கைது செய்யப்பட்ட அல்லது விசாரணைக்காக பிடித்து வைக்கப்பட்டுள்ள நபருக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் நிலைமை உள்ளது.

காவல்துறையின் அத்துமீறலை கட்டுப்படுத்த, சட்ட உதவிக்கான அரசியலமைப்பு உரிமை மற்றும் இலவச சட்ட உதவி சேவைகள் கிடைப்பது பற்றிய தகவல்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். ஒவ்வொரு காவல் நிலையம் அல்லது சிறைச்சாலையில் இலவச சட்ட உதவி சேவைகள் தொடர்பான அறிவிப்பு பலகைகள் நிறுவப்பட வேண்டும்.

இவ்வாறு நீதிபதி ரமணா பேசினார். நிகழ்ச்சியில் சட்ட உதவி கோரும் விண்ணப்பத்தை நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் சமர்ப்பிக்கும் சட்ட உதவி சேவைகள் செயலியையும் அவர் வெளியிட்டார்.

SCROLL FOR NEXT