தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்துக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றம் அனுமதியின் பேரில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி கடந்த மே 13-ம் தேதி தொடங்கியது. ஜூலை 30-ம் தேதி வரை மொத்தம் 2,266 டன் திரவ ஆக்சிஜன், 11.19 டன் வாயு நிலை ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றம் வழங்கிய 3 மாத அனுமதி ஜூலை 31-ம் தேதியோடு முடிவடைந்தது. எனவே, ஸ்டெர்லைட் நிறுவனம் ஜூலை 30-ம் தேதியோடு ஆக்சிஜன் உற்பத்தியை நிறுத்திக்கொண்டது. இங்கு பணியாற்றிய ஊழியர்கள் நிறுத்தப்பட்டனர். ஆலைக்கான குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
ஆலை வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 134 டன் திரவ ஆக்சிஜன் முழுமையாக வெளியே அனுப்பி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மின் இணைப்பை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு துண்டித்தனர். தேவையான நேரத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை உடனடியாக தொடங்கும் வகையில், தினசரி 2 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என ஸ்டெர்லைட் நிறுவனம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை அரசு நிராகரித்துவிட்டது.
ஆக்சிஜன் உற்பத்திக்கான அனுமதியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.