இந்தியா

ஊத்தங்கரை அருகே சோகம் - மின்சாரம் பாய்ந்து தாய், மகள், பேத்தி உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிச்சுமணி (58). இவரது மனைவி இந்திரா (52). இவர்களது மகள் மகாலட்சுமி (25). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் மகாலட்சுமிக்கும், மிட்டப்பள்ளியைச் சேர்ந்த சிவா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களது மகள் அவந்திகா (3). மகாலட்சுமி தனது மகளுடன் தாய் வீட்டில் தங்கியிருந்தார்.

நேற்று காலை இந்திரா, தனது பேத்தி அவந்திகாவை இடுப்பில் வைத்தபடி, துணிகளை கம்பியில் உலர வைத்தபோதுவீட்டின் மேற்பகுதி வழியாக செல்லும் மின் கம்பி மீது துணிபட்டதில் மின்சாரம் பாய்ந்தது. இருவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த மகாலட்சுமி, இருவரையும் காப்பாற்ற முயன்றார். அப்போது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இதில், தூக்கி வீசப்பட்ட 3 பேரும் அங்கேயே உயிரிழந்தனர். இதுதொடர்பாக சிங்காரப்பேட்டை போலீஸார் நடந்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாவது: இந்திரா வசித்து வந்த வீடு 1972-ம் ஆண்டு அரசு மூலம் வழங்கப்பட்ட தொகுப்பு வீடு என்பதும், பராமரிப்பு இல்லாததால் வீட்டின் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரிந்தபடி இருந்ததும், மின்சார ஒயர்கள் பல இடங்களில் சேதமடைந்து டேப் மூலம் ஒட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

மேலும், மழையால் வீட்டு சுவர்கள் ஈரமாக இருந்ததோடு, துணியை உலர வைக்கும்போது மின் கசிவால் மின்சாரம் பாய்ந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT