உத்தரபிரதேசத்தில் ரவுடிகள், மாபியா கும்பல்கள் உள்ளிட்ட சமூக விரோதிகளுக்கு சொந்தமான ரூ.1,800 கோடி மதிப்பிலான சொத்துகளை அம்மாநில காவல் துறை பறிமுதல் செய்துள்ளது.
மாபியா கும்பல்களை ஒடுக்குவதற்காக உ.பி. அரசு கடந்த 2017-ம் ஆண்டு முதல் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி, அம்மாநிலத்தில் இதுவரை 13,801 வழக்குகள்பதிவு செய்யப்பட்டுள்ளன. 43,294பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 630 பேருக்கு எதிராக தேசப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள ரவுடிகள் மற்றும் மாபியா கும்பல்களுக்கு சொந்தமான ரூ.1,848 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக உத்தரபிரதேச ஏடிஜிபி பிரசாந்த் குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “மாபியா கும்பலுக்கு எதிராக இதற்கு முன்பு இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதில்லை. தற்போதைய இந்த நடவடிக்கைகள் காரணமாக மாபியா மற்றும் ரவுடி கும்பல்களின் முதுகெலும்புகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. சொத்துகள் பறிமுதல் செய்யப்படுவதால் அவர்கள் மேற்கொண்டு தங்கள் சமூக விரோத செயல்களை தொடர முடிவதில்லை" என்றார்.